Sunday, September 23, 2007

ஓடிவிளையாடுகாதலே-7


இந்த செல்போன்

வந்தாலும் வந்தது

நீ பன்ற டார்ச்சர்க்கு

அளவே இல்லை

என்கிறாய்,


சரி என்று

கொஞ்ச நேரம்

பேசாமல் இருந்தால்

கையில் போன் இருந்தும்

இவ்வளவு நேரம் பேசாம

இருக்கியே ராஸ்கல்

என்று திட்டுகிறாய்...


காதல் விளையாட்டு

இங்கிருந்துதான்

ஓடிவிளையாட துவங்குகிறது


வீரமணி

Saturday, September 22, 2007

ஓடிவிளையாடு காதலே-6


நீ பேசாதபேச்சுகளையும்

சேர்த்து

உன்கொலுசு பேசிவிடுகிறது...


நீ செய்யாத எதையும்

உன்பார்வை செய்துவிடுகிறது...


காதலை பத்திரபடுத்த

தெரிந்த எனக்கு

உன் கொலுசுபேச்சையும்,

பார்வைசெயல்களையும்

பத்திரமாக வைத்திருக்க

தெரியவில்லை


வீரமணி

Friday, September 21, 2007

ஓடிவிளையாடு காதலே-5


காற்றில்

உன் துப்பட்டா

பறக்க

நீ நடந்து

போவதையே

வேடிக்கை

பார்க்கிற எனக்கு....


சின்ன வயதில்

துரத்திப்பிடித்து

விளையாடிய

வண்ணத்துப்பூச்சியின்

ஞாபகந்தான்

வந்து போகிறது.


வீரமணி

ஓடிவிளையாடு காதலே-4




வேண்டாம்

என்று நீ

வார்த்தையால்

சொல்கிற எல்லாமும்

வேண்டும்

என்கிற முகபாவணையோடு

இருக்கிறது......



காதலிக்க ஆரம்பித்த

நாளிலிருந்து

வேண்டும் என்பதையெல்லாம்

வேண்டாம் வேண்டாம்

என்று சொல்லியே

பெற்றுக்கொள்கிறாய் ...

வீரமணி

Saturday, September 15, 2007

சு.கீணனூர்





தூரத்து கரம்பில்
மேயும் ஆடு மாடுகள்,

நெல்லறுத்த வயல்க்காட்டில்
தப்பு கருது பொறுக்கும்
முக்காட்டுத்தலைகள்,


மெனைமெனையாய்
கட்டுத்தூக்கும்
மஞ்சள் தலை மனிதர்கள்,

சொனையை
காறித்துப்பியப்படி
நெல் கருதை
உதறி விடும்
வளையல் கைகள்,

ரோட்டோரமாய்
அடுக்கியிருக்கும்
கரும்பு கத்தைகளை
லாரியில் ஏற்றிக்கொண்டிருக்கும்
கரும்பு வெட்டு ஆட்கள்,

திட்டுதிட்டுயாய்
ஈரமுக்காட்டுடன்
ஆஞ்சி ஆஞ்சிக்குள்ளப்புட்டிகளை
நிரப்பும் மல்லாட்டை ஆசைகள்,

வெட்ட வெட்ட நீளும்
எலி வலைகளில்
வெட்டிப்பிடித்து
வறுபடும் சாராயாத்துக்கு
வெள்ளை எலிகள்,

என இன்னும் பிற
அடையாளங்களை மீறி
மழை நாட்களில்
நான்கு பக்கமும்
வெள்ளம் சூழ
"குட்டி இலங்கையாய்"
தத்தளிக்கும்
நான் பிறந்து
வளர்ந்து, வாழும்

என் கீணனூர் .

வீரமணி

Friday, September 14, 2007

நெகட்டிவ்

வெகு நாட்களுக்கு பிறகு
ஊருக்கு வந்த என்னிடம்
வெறு கண்ணசைவுகளோடு
நிறுத்திக்கொண்டாய்
என்னோடு பேச விரும்பியதை ...
நம்மிடமிருந்து நம்மை
விலகச்செய்தது
உன் அக்கா உனக்காக
கொடுத்துவிட்டுப்போன
சுருக்கம் நிறைந்த தாவணி...
என் அருகில் வாராமல்
உன்னைதடுத்தது
உன் பருவ வளர்ச்சி...
ஊரிலிருந்து புறப்பட்டு
வெகுநாட்களாகியும்
உன்னை இழந்துவிட்ட
பரிதவிப்பிலிருந்து மீளமுடியவில்லை ..
எனினும்
நீ மேய்த்துக்கொண்டிருந்த
ஆடுகளோடு சேர்த்து
எடுத்துக்கொண்ட
புகைப்பட நெகட்டிவ்
என்னிடம் இருக்கிறது
பத்திரமாக.....
வீரமணி

படப்பிடிப்பின் பதிவுகள் -3











இயக்குனர்தமிழ்வாணன் மற்றும் படப்பிடிப்புக்குழுவினர்கள் .......








நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் இந்த தொடருக்கு தலைப்பை கொடுக்காமல் எழுதிவிட்டேன் நண்பன் அருள்தான் தலைப்பு வைத்து எழுது என்று சொன்னான்..பதிவின் 3வதுபகுதி இது இனி தொடர்ந்து சந்திக்கலாம் சக உதவி இயக்குனர்கள்மற்றும் முதல் நாள் முதல் நாயகன் ஜீவனுக்கு காட்சியை விவரக்கிறார் ஜீவன் ஏதோ யோசித்தப்படி இருக்கிறார் இயக்குனர் விவரத்து விட்டு எங்களிடம் வந்து ஷாட் ரெடி கூப்பிடுங்கள் என்கிறார் முகத்தில் ஏதோ ஓர்திருப்தியின்மை நாங்கள் "என்ன சார் ஒரு மாதிரியாக இருக்கீங்க" என்றுகேட்க அவர் "ஒன்னுமில்லை" என்று சொல்லிவிட்டு கேமராமேன் சாரிடமும் இணைஇயக்குணரிடமும் ஏதோசொல்லிக்கொண்டு இருக்கிறார் எங்களுக்கு (உதவியாளர்கள்) சிறுதயக்கம் சிறிது நேரத்தில் ஜீவன் வருகிறார் ஷாட் ஓ.கே ஆகிறது இயக்குனர் முகத்தில் சந்தோஷம்.... தொடரும்

படப்பிடிப்பின் பதிவுகள்-2

கள்வனின்காதலி படம் முடிஞ்சதும் நான் அந்தப்படத்தின் விளம்பரம் பப்ளிசிட்டி வேலையில இயக்குனர் ஆலோசனைப்படி தீவிரமாக இருந்தேன்... ஒருப்பக்கம் தனிமுயற்சியையும் ஆரம்பிசிட்டேன்.....இப்படியே ஒரு நாலுமாசம் போய்டுச்சி...எனக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார்..ஒரு கதாநாயகனும் கிடைத்தார்....சரி ஜெயிச்சிட்டோம்னு நினைக்கும்போது தயாரிப்பாளருக்கு ஒரு துயரசம்பவம்..சினிமா சென்டிமென்ட் என்க்கு தாமதம்,,,அந்த கதாநாயகன் காத்திருந்துவிட்டு வேறுஒரு பெரிய நிறுவனம் மூலம்பெரிய நாயாகானாகிவிட்டார்... பிறகு ஒரு நாள் இயக்குனர் தமிழ் சார் தொலைபேசியில் கூப்பிட்டார் ...நானும் இன்னொரு உதவியாளர் முருகையாவும் சென்றோம்..மச்சக்காரன் கதையை சொன்னார்,,விவாதித்தோம்..கதை நன்றாகவும் விறுவிறுப்பாகவும் வளர்ந்தது மற்ற உதவியாளர்கள் அனைவரும் சேர்ந்து இயக்குனரின் ஆலோசனைப்படி திரைக்கதை அமைத்தோம் நாயகன் ஜீவனிடம் திரைகதையை சொன்ன இயக்குனர் வெற்றியுடன் வந்தார் தயாரிப்பாளர்க்கிடைத்தார் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் நாள் படப்பிடிப்பின்முதல் shot........

Thursday, September 13, 2007

படப்பிடிப்பின் பதிவுகள்-1

மச்சக்காரன் படப்பிடிப்பில் எனது உதவி இயக்குனர் அனுபவம் பற்றி ஒரு சிறிய தொடர் எழுதப்போகிறேன்

அதன் படப்பிடிப்பு புகைபடங்களுடன் தொழில்நுட்பக்கலைஞர்களூடான எனது அனுபவம் பற்றியும் எழுதப்போகிறேன்..... இது பெரிய விஷயமில்லைதான் எனினும் எனது நண்பர்களின் வேண்டுகோளுக்காக....

சந்தேகம்


பூத்துக்குலுங்குகிறது
உன்னைப்பற்றிய
என்கனவுப்பூக்காடு....
நட்சத்திரக்கண்கொண்டு
என் ரகசியங்களை
வேவுப்பார்க்கிறது
உன்நினைவு சரடுகள்...
ஆலமர விழுதாய்
கிளை தாங்குகிறது
நாம் சேர்ந்து வாழ்ந்த
சில நாட்களின் ஞாபகங்கள்....
எப்பொழுதாவது
உன் கணவன்
என்னை ஒத்த
சில்மிஷங்கள்
செய்யும்போது
என்னை நினைத்துக்கொள்ளாதே...
எனக்குப்பிரையேறினால்
என் மனைவி
சந்தேகிக்ககூடும் என்னை...
வீரமணி

Wednesday, September 12, 2007

வெளுக்கும் சாயம்


ஒரு வண்ணத்துப்பூச்சியையும்

பிடித்து சாக செய்யவில்லை.......

ரெக்கைகளை அழுத்தி

பாடப்புத்தகத்தின் நடுபக்கத்தில்

அதன் வண்ணங்களை

ஒட்டிகொண்டதை தவிர....

Tuesday, September 11, 2007

அனுசரனை













எதுவும் பேசாமால்
பார்வையால் உரைத்துவிட்டு
போனாய் என் மீது இருந்த கோபத்தை

மாடிப்படி இறங்கியபோது
உன் மிதியடிகள் உண்டாக்கிய
சத்தம் ஒவ்வொன்றுக்கும்
சாபசொற்களின் சக்தி இருந்தது...

நான் நிதானமாகதான்
இருக்க முயற்சித்தேன்
எஞ்சித்திமிரிய
உன் அனுசரனைதான்
என்னை கிளறிவிட்டது.

என் ரத்ததை
புடைக்க வைத்தது
மென் வியர்வை பூத்த
உன் பெண்வாசந்தான்....

இனி எந்த பூவையும்
சூடிக்கொண்டு வராதே...
நீ....

முக்கியமாக பெண்ணாக வரவேண்டாம்
எனது வீட்டிற்கு...........


வீரமணி

Monday, September 10, 2007

நிசப்தம்














இரயில் சென்று விட்ட

கடைசி நொடியின் நிசப்ததில்

பேசிக்கொண்டு இருக்கிறேன்,

இரயிலில் சென்றுவிட்ட

உன்னிடம்...


வீரமணி

நன்றி; ஆனந்தவிகடன்

கசக்கும் சக்கரை




















அம்மா உங்களை
பெத்து வளர்த்த மாதரிதான்
நானும் இந்த கரும்பை
வளற்கிறேன் என்பார் அப்பா..

விதை புள்ளுப் போட்டதிலிருந்து
கரும்பு வெட்டி அனுப்பிய வரைக்கும்
அவர் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது....
என்றாலும் கஷ்டப்பட்டாதாம்
கிடைக்குமென சொல்லிவிட்டு ஓடுவார்
ஒவ்வொரு ராத்திரியும் பகலும்,,,

வெட்டி அனுப்பிவிட்டு
காசுக்கு நடையாய்
நடக்கும்போதுதான் சொன்னார்
இப்படியொரு விவசாயம் பண்றதவிட
எவனுக்காவது செரச்சிவுட்டு சம்பாதிக்கலாம் என..............
எனக்கு முடி வெட்டிவிடும்
புத்தூர்பாண்டியன் சொன்னார்
என்னா தம்பி பொழப்பு இது
உங்க அப்பாவாட்டம் விவசாயம் பார்த்தாலாவது
நாலு காச கையிலப்பார்க்காலம் என்று....

மரணம் பற்றிய பகிர்தல்கள்











மருத்துவமனைகளின்
மயக்க வாடையை
நுகர்ந்ததுண்டா

பேறுகாலத்தில்
புள்ளை பெத்துக்கொள்ள
மனைவியை அழைத்துக்கொண்டு
மருத்துவமனை வாசல்களில்
நடுராத்தியில் நின்றதுண்டா

நோயாளிகளை அழைத்து வரும்
ஆம்புலன்ஸ் அலறலில்
உயிர் அதிர்வை உணர்ந்ததுண்டா

அய்...சி..யூ வார்டில் ஆரம்பித்து
சி...சி...யூ வார்டு வரை
அலைந்ததுண்டா

ஆக்சிடண்ட்டில்
உயிர் சிந்த அட்மிட் ஆகும்
அரைப்பிணங்களின்
கடைசி நிமிடங்களின்
முனகல் சத்தம் சந்தித்துண்டா

மார்ச்சுவாரி வாசலில் காத்திருந்து
உறவினர் அல்லது நண்பனின்
பிரேதம் வாங்கியதுண்டா....

அதிமுக்கியமாக
அனைத்தும் முடிந்து
கேஷ் கவுண்டரில்
சொத்தைவித்து பணம் கட்டியதுண்டா.....

அறுத்துக்கொடுத்த பிணத்தை
சொந்த ஊருக்கு எடுத்து சென்று
அடக்கம் செய்தபோது
கண்ணு மூளையெல்லாம்
அறுத்த மிச்சத்தைதான் கொடுத்தாங்களாம்
என்ற சொல்லை
காதில் வாங்கி
துடித்ததுண்டா....
மரணத்தை பற்றி வேறு என்ன பகிர....

ஓடி விளையாடு காதலே


றெக்கை முளைக்காத
ஈசல் போல
சுற்றி சுற்றி வருகிறாய்
எனதறையில் .......

விடிந்தபிறகு
செத்து கிடந்தது ஈசல்
காணாமல் போயிருந்தாய்
நீ.....

வீரமணி

அடங்க மறுக்கும் திமிர்


பேரப்பிள்ளைகளை
பார்க்கபோன அப்பாவுக்கு
அக்கா
கேஸ் ஸ்டவ்வில்
சோறாக்கிப்போட்டதை
பெறுமைப்பொங்க சொன்னார்........

அடுப்புக்கு முள்ளுப்பொறுக்க போன
பெரிய வாய்க்கா மேட்டில்
செருப்பை தொலைத்ததற்காக
அக்காவை அடித்தது
ஞாபகத்துக்கு வந்திருக்குமாயெனத்
தெரியவில்லை அவருக்கு..............


வீரமணி

Sunday, September 09, 2007

முத்த நிவாரண நிதி






கட்டுக்கு அடங்காது

பெய்த உன் பார்வை மழை

என் காதல் ஏரியை

உடைத்து போட்டுவிட்டது.

நீதான் தர வேண்டும்

முத்த நிவாரணநிதி.....,

புழக்கத்தில் இருக்கும் வாசகம்


அருவங்கட்டை ,கம்மம்புல்,
என எருமைகள் மேய்ந்த
செல்லியம்மன் கோயில் திடல்
வெடிப்போடிக்கிடக்கிறது.

கரிசலாங்கன்னி,பொன்னங்கன்னி என
பூத்துக்கிடந்த வாய்க்காமேடு
கருவேலங்காடாகி
அனல் வீசுக்கிறது

ஊராகாலி மாடுகள் மேய்ந்த
மந்தக்கரை கலுங்கு குட்டை
வறண்டு போனதில்
மாடுகள் கேரளாவுக்கு
லாரி ஏறிவிட்டது..

பொரை, பன்னு முருக்கு என
தொங்கிய டீக்கடை வாசல்களில்
சரம்சரமாக தொங்குகிறது
பான்பராக், மாணிக்சந்த் குட்கா,

புடவை ,பாவாடை, ஜாக்கெட்துணியென
மூட்டையில் உலாவந்த ஜவளி
நைட்டி பிரா என உள்ளாடைகளாகவும்
தள்ளுவண்டிகளில் வீதியை சுற்றுகிறது.

.கேபிள் ஒயர்கள்
வீட்டுக்கு வீடு உலகம் உரையாடுகிறது....

எப்போதும் போல
இப்போதும் இருக்கிறது
காலம் கெட்டுப்போச்சென்ற வாசகம்

புழக்கத்தில்.....


வீரமணி

இடிஞ்ச கோயிலும்,, கிழிஞ்ச மேளமும்




"பல்ப குச்சிக்கு கோவைதழை"
"பல்ப குச்சிக்கு கோவைதழை"

என கூவி கூவி கோவைதழை விற்று
உனக்கு பல்பம் வாங்கி கொடுத்தது.....

எல்ந்த பழத்தைவிட உனக்கு
காரப்பழந்தான் பிடிக்கும் என்பதற்காக

காரைப்புதரில் பறித்து
ஜாம்ண்டரி பாக்சில் நிரப்பி கொடுத்தது

மைசூர் பாக்கைவிட
அச்சு வெல்லம் பிடிக்குமென
வாய்க்கா மேட்டில்
புளியம் பழம் பறித்து
செட்டியார் கடையில்
அச்சு வெல்லம் வாங்கிகொடுத்தது

முதல் மார்க் வாங்கதான்
பிடிக்குமென்று நீ சொல்லிவிட
உனக்காக இரண்டாவது மார்க் வாங்கியது

என எல்லாவற்றையும் மறந்து
என்னைவிட வீட்டில் பார்த்த மாப்பிளைதான்
பிடிச்சிருக்கென்று சொல்லிவிட்டு
கல்யாணம் கட்டிகொண்டு
நீ போனபோதுதான் தாங்கமுடியவில்லை

போடி...போ......

போகிற இடத்திலாவது
உண்மையா இரு...
இந்த இடிஞ்ச கோயிலுக்கு
ஒரு கிழிஞ்ச மேளம்
கிடைக்காமலா போயிடும்.....

வீரமணி

Friday, September 07, 2007

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி வலைபதிவு அன்பர்களுக்கு
ஒரு துக்கமான செய்தி
நம்முடைய நண்பரும்
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின்
தந்தை திரு.நாகராசன் அவர்கள்
மரணமடைந்தார் என்ற வருத்தமான
செய்தியை பகிர்ந்துகொள்கிறேன்....
துக்கதுடன்
வீரமணி

பிஞ்சு காதல்




உயிர் அதிரும் பயணம்
ரயில் பாதை அருகே
வழ்ந்து கொண்டிருக்கிறேன்..

அதிர்ந்து பின் நிகழும்
மெளன சாம்ராஜ்யத்தில்
வெந்து புழங்கும்
உன் நினைவில் என் தனிமை

உன் பிஞ்சு விரல்களால்
கவிதை கிளறி
குளிர் காய்கிறது
என் காமம் .

தண்டவாளமோர
ஒற்றைபனை மரத்தில்
கிளிகள் வாழும் பொந்துக்குள்
இரைதேடும் என் பார்வைகள்.

என் ஞாபகமின்றி
ஏதாவது ஒரு கரம்பு வெளியில்
ஆடு மேய்த்துக்கொண்டிருக்கலாம்
உன் சகத்தோழிகளோடு...

வீரமணி

Thursday, September 06, 2007

நீ பரிசளித்த பாலைவனம்

மனைவியாக நீபரிசளித்த
சம்மதங்கள்
கருவேலங்காட்டிலிருந்து
கடல்கடந்து படர்ந்திருக்கிறது
நீளமான பாதையாக

நீயும் நானும் உடல்கள் தாண்டி
உயிர்களை தழுவிக்கொண்டு
பசியாரினோம்

நீ இல்லாத என் இரவை
விழித்தபடியே வைத்திருக்கிறது
உன்மல்லிகை வியர்வை

உடல் பகிர்ந்து தணிந்த தாகத்தின் ஞாபகம்
அதிகமாகி அழிந்த நிமிடங்களில்
உன் தனிமை என்னை அறைந்து செல்கிறது

உதடு பதிந்த கன்னத்திவலைகளில்
நீ ஓங்கி கடிக்கிறாய்

உன் நகைகளையும் சேர்த்து
அடகு வைத்து என்னை அனுப்பிவிட்டு
வெம்பி கிடக்கிறாய் உன்னைப்பகிர்ந்த படுக்கையில்..

படுக்கைகளின் வெப்பங்கள்தான்
நான் ஒட்டகம் மேய்க்கும் பாலைவனம்..