Friday, April 25, 2008

வாய்மொழி இலக்கியம்-இரத்தின.புகழேந்தி

இரத்தின.புகழேந்தி


தமிழில்செவ்விலக்கிய வடிவங்களுக்கு அடிப்படையாக விளங்கியவை வாய்மொழி இலக்கியங்களே என மொழியியல் அறிஞ்ர்கள் கருதுகின்றனர். எழுத்து மொழிக்கு முன்பே வாய் மொழி தோற்றம் பெற்றது என்பது மொழியியல் கொள்கை. தமிழ் இலக்கியம் இன்று செழித்து வள்ர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக விளங்குவது வாய்மொழி இலக்கியம் என்பதை மறுக்க இயலாது. ஆனால் இன்றைய இலக்கிய உலகம் வாய்மொழி இலக்கியத்தை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. தரப்படி நிலையில் எழுத்திலக்கியம் உயர்வானது,வாய்மொழி இலக்கியம் தாழ்வானது என்ற கருத்து நிலவுகிறது.

வாய்மொழி இலக்கியம் என்பது நாட்டுப்புறவியல் தொடர்பான ஒன்று,அதற்கும் இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்ற சூழல்தான் நிலவுகிறது. எழுத்தியலக்கியப் படைப்பாளி தனியாளாகத் தன் படைப்பை வெளியிடுகிறார். வாய்மொழி இலக்கியத்தைப் படைத்தவர் இவர்தான் என அடையாளம் காட்ட இயலாது அது கூட்டுப்படைப்பாகத் திகழ்வது. இந்த நிலைதான் வாய்மொழி இலக்கியத்திற்கு பலமாகவும்,பலகீனமாகவும் அமைந்து விடுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு படைப்பாளி இருப்பதை வெளிப்ப்டுத்துவது வாய்மொழி இலக்கியம். ஒரு சில இலக்கியவாதிகள் தங்கள் தலைக்குப்பின்னே ஒளிவட்டம் இருப்பதாக கருதிக்கொள்வதைப்போல் வாய்மொழி இலக்கியவாதிகள் கருதுவதில்லை,சிற்றூர்ப்பண்பாட்டில் தாலாட்டு,ஒப்பாரி,பழமொழிகள்,விடுகதைகள்,கதைகள்,வரலற்றுப்பழ மரபுக்கதைகள், கதைப்பாடல்கள்,கூத்து,பிறப்பாடல்கள் என ஏராளாமான வடிவங்களில்,வாழ்வோடு கலந்த ஒன்றாக வாய்மொழி இலக்கியம் விளங்குகிறது.
மனித வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய சூழல் ,மனிதர்களைகளை பல்வேறு காரணங்களால் இடம் பெயரச்செய்துள்ளது.நகரமயமாதல் காரணமாகவும் வாய்மொழி இலக்கிய வடிவங்கள் மாற்றத்தையும் ,சிதைவுகளையும் பெற்றுள்ளன.

இது குறித்து ஆய்வுகள் பல்கலைகழகங்களைத்தாண்டி இன்னும் வரவில்லை.தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் வாய்மொழி இலக்கியங்கள் எவ்வாற் தோற்றம் பெற்று எப்படிப்பரவுகின்றன என்பதை வரலற்று நில்வியல் கோட்பாடு அடிப்படையில் நிட்டூரிகதை,சின்னண்ணன்கதை ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக்கொண்டு ஆய்வு செய்துள்ளார்.ஆய்வுநூல் என்ற எல்லைக்குள் அதனை அடக்கிவிடமுடியாது.

அதுபோலவே அவர் அண்மையில் தமிழகம் முழுவதும் வழக்கிலுள்ள கதைகளையும், பாடல்களையும் முதன்மைப்பதிப்பாசிரியராக பணியாற்றி பத்து, பத்து தொகுதிகளாக தொகுத்துள்ளார்.அதில் காணப்படும்பல் கதைகள் இன்றைய சிறுகதைகளோடு ஒப்பிடுகையில் அத்தனை இலக்கியத்தகுதிகளையும் பெற்றதாகவே உள்ளன.

வாய்மொழி,எழுத்து-இவற்றிற்கிடையே நிலவும் இடைவெளியைக்குறைக்க இலக்கிய இதழ்கள் செய்யும் முயற்சிகள் இன்னும் பரவலாக வேண்டும்.

"காதல் காதல்

காதல் போயின்

சாதல் சாதல் சாதல்" என்று பாரதி பாடினான்.அதற்கு முன்பே

தமிழச்சி ஒருத்தி"ஆசவச்சேன் ஒம்மேல அரளி வச்சேன் தோட்டத்துல"

என்று பாடி வைத்திருக்கிறாள். பாவலர் அறிவுமதி இந்த மேற்கோளை அடிக்கடி சுட்டிக்காண்பிப்பார்."ஆராரோ ஆரிராரோ என் கண்ணே
ஆராரோ அரிராரோ
அடுப்பு மொழுகியல்லோ என் கண்ணே
அடுப்புமேல கோலமிட்டு
மூணடுப்பு மூட்டி எங்கண்ணே
முதலடுப்பு தீ மூட்டி
தங்க விறகுடைத்து எங்கண்ணே
தவலையில் பால்காய்ச்சி
பாலு குடியடா எங்கண்ணே
பாட்டன் குடி ஈடேற"
(பாஞ்சாலி-மணக்கொல்லை)

என்ற தாலாட்டுப் பாடலில் சிற்றூப் பண்பாடும் ,பழக்க வழக்கமும் வெளிப்ப்டுகிறது.

"எடுத்தன் நுகத்தடியை
பூட்டினேன்பொன்னேர-அந்த
பொன்னேரு போய்திலும்ப-எனக்கு
பொழுது உண்டா..."
என்ற பாடல் வேளாண் தொழிலின் பழமையை உணர்த்துகிறது.

இது போன்ற ஏராளமான சான்றுகளைச் சுட்டிக் கண்பிக்கலாம்.பாடல்கள் பல்வேறு பாடு பொருள்களை உள்ளடக்கியதாகவும் கதைக்கருக்கள் ஏராளமானதாக அமைந்த கதைகளை உள்ளடக்கியதாகவும் விளங்கும் வாய்மொழி இலக்கிய வகைகளை அடையாளம் காண வேண்டிய தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


நன்றி-ஆழி காலாண்டிதழ்

கட்டுரை ஆசிரியர்பற்றி;


இரத்தின.புகழேந்தி,கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் அருகில் உள்ள மருங்கூரை சேர்ந்தவர். இவர் மண்கவுச்சி, நகர்குருவி என்ற இரண்டு கவிதை நூலுக்கு ஆசிரியர்,மேலும் கிராம சிறுவர்கள் விளையாட்டுகளை தமிழ் ஓசை களஞ்சியத்தில் எழுதி வரும் இவர் பள்ளிஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கிராம அடையாளங்களை தொலைக்காமல் இருக்கவேண்டும் என்ற ஈடுப்பாட்டுடன் இருக்கும் இவரின் படைப்புகள் எல்லாமே தமிழில் மிக முக்கியாமான படைப்புகள் ஆகும்.

Tuesday, April 08, 2008

கவிதை

தொலைத்து, தொலைந்து
கொண்டு இருக்கிறோம்..

நகர எல்லை கடந்து
காணிக்கல் பலகையில்
பெரியார் நகர்,
அவ்வைநகர் என
பெயர் தாங்கி
நகர் மயமாகிறது கிராமங்கள்.

வீட்டுக்கு வீடு இருந்த
கட்டுத்தெருக்களையும்
ப்ளாட் போட்டுவிட்டு
வண்டிக்கடைகளில்
பீஃப் பிரியாணி
சாப்பிடுகிறோம்,

காற்றொலிப்பானில்
சத்தமெழுப்பி
குழந்தைகளை கூப்பிடும்
அய்ஸ் வண்டிகாரர்கள்
வருவதில்லை,
குழந்தைகளை
அழைத்துகொண்டு
பேக்கரிகளுக்கு செல்கிறோம்
வெனிலாக்களை சாப்பிடுவதற்கு,

"ஒரு படி நெல்லுக்கு
மூனு படி உப்பே....."
எனற ராககுரல்கள்
கேட்பதில்லை ஊருக்குள்,
தூள் உப்பாக
மளிகை பட்டியலோடு
வந்துவிடுகிறது.
சட்டிபானை,
அம்மி,கொடக்கள்ளு
ஏற்றி வரும்
கட்டைவண்டிகள்
வருவதில்லை ஊருக்குள்.
மிக்சி,கிரைண்டர்களை
ஏற்றிகொண்டு வருகிறது
மூன்று சக்கர வாகனங்கள்,

கெடா மீசை ,கொடுவாகத்தியோடு
ஊர் எல்லையில் நின்று இருந்த
வீரன், அய்யனாரெல்லாம்
காணாமல் போக
வீதிக்கு வீதி கொழுக்கட்டைகளை
சாப்பிட்டுகொண்டிருக்கிறார்கள்
பிள்ளையார்கள்.

வீட்டு தோட்டத்தில்,
வயல் வரப்புகளில்
விளைந்ததை ,

பழைய இரும்பு தகரத்துக்கு
எடைக்கு எடை
வெங்காயம், தக்காளி என
கூவி விற்றதை,

முனை கிள்ளிப்பார்த்து,
நிமிண்டிப்பார்த்து,
முறுக்கிப்பார்த்து,
வாங்கியதையெல்லாம்
மறந்த்துவிட்டு

குளிர்சாதன
அறைகளின் அடுக்குகளில்
அடுக்கியிருக்கும்

பதபடுத்திய "பழசு" களை
"பிரஷ்ஷாக"
வாங்கிகொண்டிருக்கிறோம்
ரிலயன்ஸ் ஃபிரஷ்களில்
. .