Friday, December 26, 2008

அல்லக்கைகள்

தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும்.

“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்து பாம்புகளினால் சாகும் பரிதாபம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் புரிகிறோம் என்று கூறிக்கொண்டு தன் நாட்டின் சக குடிகளான தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் வான் வழியே குண்டு வீசிக் கொலை செய்கிறது. நாம் வாழும் உலகில் எங்குமே நடைபெறாத இத்தகைய கொடுமைகள் இலங்கையில் மட்டுமே சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் என்ற ஒரு இனமே இருக்கக்கூடாது. அதைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு செயல்படுகிறது.மேற்கண்ட படுபாதகச் செயலை மனித நேயமிக்க அனைவரும் கண்டித்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக அக்டோபர் மாதம் தொடக்கத்தில் திரண்டனர். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு சில கட்சிகள் தவிர தமிழகம் ஒரணியில் திரண்டது. மக்களின் எழுச்சியின் விளைவாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை சிங்கள அரசை நிறுத்தி வலியுறுத்தி இந்திய அரசைக் கோரியும், அதை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (அதன்பின்பு இந்த விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள் பதவிக்காக அந்தர் பல்டி அடித்ததையும் நிவாரண நிதி வசூல் என்று பிரச்சனை திசை மாறியதையும்) சென்னையில் இலங்கை அரசினை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் மக்களின் எழுச்சியான போராட்டங்கள், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மிரட்டல், அனைத்துக் கட்சிகளின் மனிதசங்கிலி போராட்ட அறிவிப்பு என்று ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டங்கள் உத்வேகமடைந்த நிலையில் இலங்கை சிங்கள அரசு அஞ்சியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சியை தன் பங்குக்கு ஒடுக்க சிங்கள அரசு எண்ணியது. ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய நினைத்த அதன் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் நன்கு பயன்பட்டனர். ஆம். சிங்கள அரசின் முயற்சிக்கு சிங்கள அதிகார வர்க்கத்தின் நீண்ட நாள் ‘நண்பர்’ ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலி உதவினார். ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நினைத்த சிங்கள அரசின் எண்ணத்திற்கேற்ப தாளமிட்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள். ஆம் சிங்கள அரசுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் சிலருக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர் அசன் அலி. அதற்கு அவர்கள் தலைவி ராஜிவ்காந்தி கொலை பயன்பட்டது.தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் சிலர் ஆவேசப்பட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதை மட்டுமே வெறும் சாக்காக வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஈழ ஆதரவையும் விடுதலைப் புலிகளின் ஆதரவு போராட்டம் என்றும், விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்தி எங்கள் தலைவர். அவரைக் கொன்றவர்களை நாங்கள் எப்படி ஆதரிப்பது? என்றும் ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிப்பது தேசத் துரோகம் என்றும் ஆகவே நடைபெறும் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானது என்றும் ஆகவே அதை ஆதரிக்க முடியாது என்றும் ஈழத் தமிழர் போராட்டத்தை கணிசமாக நீர்த்துப் போகச் செய்ததில் காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதன் உச்சகட்டமாக எழுந்த வசனங்கள் தான். ‘‘ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’. என்னும் திரைப்பட பாணியிலான வசனம்.பதவிக்காக எந்த இழி செயலையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரஸ், தாம் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா, கருணாநிதி, கம்யூனிஸ்டுகள் ஏன் பெயரளவு கொள்கை கூட இல்லாமல் நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உட்பட யாருடனும் கூட்டு சேரத் தயாராக இருக்கும் காங்கிரசார். பதவிக்கு வந்து விட்டால் இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்திலும் ஊழல் புரிவதில் கை தேர்ந்த காங்கிரசார் 17 வருடங்களுக்கு முன் செத்துப் போன ராஜீவ்காந்தி விஷயத்தில் மட்டும் அவர் ஆவியே மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் ராஜீவ்காந்தி பேரிலான தீராத அன்பின்பால் குடம் குடமாய் கண்ணீர் வடிக்கிறார்களா? என்று பார்த்தால் அது நீலிக் கண்ணீர் என்று நடந்தவற்றை ஆராயும் போது தெரிகிறது.ஆம். சில ஓட்டுக்கள் வாங்குவதற்காக கவர்ச்சி நடிகை மாயாவை களத்தில் இறக்கும் காங்கிரசாருக்கு சில நூறு ஓட்டுக்கள் வாங்குவதற்காக ராஜீவ்காந்தி மரணம் பயன்படுகிறது ஆகவே களத்தில அவரை வைத்து தொடர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று மேலோட்டமாக கருத முடியாது. ராஜீவ்காந்தி அவர்களுக்கு இன்னும் ‘மதிப்பு’மிக்க தலைவர். அதை அவர்களுக்கு ராஜபக்ஷே ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி மூலம் புரிய வைத்தார். அசன் அலிக்கும் மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் இடையேயான தொடர்பு பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.ராமநாதபுரம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கும், இலங்கையின் தற்பொழுதைய அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நீண்ட காலமாக ‘நெருக்கமான’ தொடர்பு உண்டு. ஆகஸ்டு மாதம் 2005 ஆம் வருடம் இலங்கையின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பாக அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வாழ்த்துக் கூறி அசன் அலி கடிதம் எழுதுகிறார். அவரது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார். அப்பொழுது அசன் அலி சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. அதன்பின்பு மகிந்த ராஜபக்ஷே இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்பொழுது அசன் அலிக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார் (கடிதம் பார்க்க). இலங்கை எதிர்க்கட்சிகள் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் அசன் அலியை வாழ்த்துகிறார். மற்றும் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர். (ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராஜ்பக்ஷ எழுதிய வாழ்த்துக் கடிதம்)இங்கு நம் முன் எழும் வினாக்கள்1) பிரதமராக இருக்கும் ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படும் பொழுது அசன் அலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுகிறார். அசன் அலி எந்தப் பதவியிலும் அப்பொழுது இல்லை. சென்னையில் வாழும் சாதாரண இந்தியக் குடிமகன். ஆனால் அவர் ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?2) அசன் அலி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றதும் அவருக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். தமிழகத்தின் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்கு இன்னொரு நாட்டின் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவரும் போட்டி போட்டு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?3) காங்கிரஸ் கட்சியில் இங்கு பலபேர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி போட காத்திருக்கையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத அசன் அலிக்கு சீட் கிடைத்தது எப்படி?4) ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர வன்னி, மலேசியா பாண்டியன் போன்றோருக்கு தான் சீட் கிடைக்கும் என்று அங்குள்ளவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, தொகுதிக்கு தொடர்பில்லாத அசன் அலிக்கு சீட் எவ்வாறு கிடைத்தது?அசன் அலி தமிழக சட்டமன்ற உறுப்பினரான பின்பு இலங்கையின் அதிகார மட்டத்தினருடன் தொடர்பு அதிகரிக்கிறது. தனது நட்பு வட்டாரத்தை காங்கிரஸ் எம். எல். ஏ. க்களில் அதிகரித்து வந்தார். வேலூர் எம். எல். ஏ. ஞானசேகரன் போன்றோர் இதில் அதிக நெருக்கமாகின்றனர். ‘ஒற்றுமை’யாக இருக்கின்றனர். தங்களுக்குள் அனைத்தையும் ‘பகிர்ந்து’ கொள்கின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தின் தற்பொழுதைய சம்பவங்களை ஒட்டி ஈழத்தமிழர் ஆதரவு அலை அதிகரிக்கவே அதனைக் குறுக்குச் சால் ஓட்டிக் கெடுக்கும் விருப்பத்தின் விளைவாக 29. 10. 2008 அன்று ராஜபக்ஷே அசன் அலியுடன் பகல் 11 மணிக்கு பேசுகிறார். தமிழகத்தில் நடைபெறும் விஷயங்கள் பரிமாறப்படுகின்றன. தொலைபேசி பேச்சுக்குப் பிறகு அசன் அலி துரிதமாகச் செயல்படுகிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அவரே அனைத்து காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் அவரது தொலைபேசியில் இருந்து பேசுகிறார். அதன்படி 23 நவம்பர் 2008 அன்று காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.எதிர்பார்த்தபடியே வேலூர் ஞானசேகரன் எம். எல். ஏ. உட்பட பலரும் வஞ்சனை இன்றி வீர உரை நிகழ்த்துகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசுபவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார். கூட்டத்திற்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மனித சங்கிலியில் தமிழக காங்கிரஸ் பஙகேற்கவில்லை என்ற நிலைப்பாடு எடுக்கிறது. அதற்கு அவர்களுக்கு ராஜீவ்காந்தி கொலை பயன்படுகிறது. மனித சங்கிலி போராட்டத்திற்கு பின்பு நிலவரம் மாறுகிறது. பிரணாப் முகர்ஜி வருகைக்குப் பிறகு தமிழக முதல்வர் எம். பி. க்கள் ராஜினாமா இல்லை என்ற முடிவுக்கு வரும் தமிழக முதல்வர் ஈழத் தமிழர் நிவாரண நிதி வசூல் செய்கிறார்.அதன்பின்பு 4. 11. 2008 அன்று காலை 10 மணியிலிருந்து அசன்அலி ராஜபக்ஷேவுக்கு தொலைபேசியில் பேச முயற்சி செய்கிறார். ஆனால் பலமுறை முயன்றும் பேச முடியவில்லை. அதன்பின்பு காலை 12 மணிக்கு ராஜபக்ஷே நேரடியாக அசன் அலியின் கைபேசி 9444112374 எண்ணுக்கு பேசுகிறார். தொலைபேசியில் ராஜபக்ஷேவுடன் பேசியதை அசன் அலியே குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரிடமும், ஜூனியர்விகடன் நிருபரிடமும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே அதற்கு ஆதாரம் தேவையில்லை. ஏறத்தாழ 25 நிமிடம் பேசிய பின்பு அசன் அலி சக தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுடன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து அன்றே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் மிக முக்கியமானது.‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க ஒரு தூதுக்குழு அமைத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை (!) நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்துகிறார். அந்தத் தூதுக்குழுவில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கை அமைச்சர்களிடமும் மற்றும் இலங்கை அதிகாரிகளிடமும் பேசி 50 ஆண்டுகளாகத் தீராத இலங்கைப் பிரச்சனையைத் தான் தீர்த்து வைப்பதாக நமது முதல்வருக்கே உத்தரவாதம் (!) அளிக்கிறார். அதேபோல அக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தானே செய்து தருவதாக உறுதிமொழி அளிக்கிறார். ’’ (ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ரணில் எழுதிய வாழ்த்துக் கடிதம்)இங்கு நமக்கு எழும் வினாக்கள்1) ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் இன்னொரு நாட்டு அதிபருடன் சரளமாகப் பேச முடிகிறது?2) அசன் அலி பேசுவது அவரது கட்சித் தலைவி சோனியாவுக்குத் தெரியுமா? இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா? நமது தமிழக முதல்வருக்குத் தெரியுமா?3) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும் என்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடிவு செய்துள்ளதா? அவ்வாறு தலையிட முடிவெடுத்து அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலியை நியமனம் செய்துள்ளதா?4) அவ்வாறு இல்லாமல் யாருடைய அனுமதியும் பெறாமல் யாருக்கும் தெரியாமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி பேசியிருந்தால் அதற்கு என்ன தண்டனை?5) சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இலங்கை அதிபருடன் அசன் அலி பேசுவதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பதவி ஏற்கும் பொழுது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார். அதற்கு என்ன தண்டனை?6) 3. 11. 2008 அன்று 12 மணிக்கு ராஜபக்ஷேவுடன் பேசிய உடன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவதன் காரணம் என்ன?7) கடிதத்தில் இந்திய தூதுக்குழு இலங்கை சென்றால் அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடிகிறது? அசன் அலிக்கு அங்கு அதிகார மட்டத்தின் அனைத்து நபர்களுடனும் நட்பு உண்டா?8) அசன் அலி காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. க்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு தனது தொலைபேசியில் இருந்து அனைத்து எம். எல். ஏ. க்களுக்கும் பேசுகிறார்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவரைத் தாண்டி ராஜபக்ஷேவின் நண்பருக்கு இதில் என்ன அக்கறை?9) ராஜபக்ஷேஉடன் பேசிய பின்பு முதல்வருக்கு அன்றே கடிதம் எழுதும் அசன் அலி அதில் இலங்கை பிரச்சனை தீர அனைத்துக் கட்சி தூதுக் குழுவை அமைக்க வலியுறுத்துகிறார். இது அவர் விருப்பமா? இல்லை தொலைபேசியில் பேசிய ராஜபக்ஷே விருப்பமா?10) ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலம் நீடிக்கும் இலங்கை பிரச்னையில் இங்கிருந்து செல்லும் தூதுக்குழு பேசி தீர்க்கும் என்று முதல்வருக்கு உத்திரவாதம் அளிக்கிறாரே? இது உண்மையான விருப்பமா? அல்லது பேச்சு வார்த்தை என்று ஒரு பக்கம் இழுத்தடித்துக் கொண்டு மறுபக்கம் தமிழனைக் குண்டு வீசிக் கொலை செய்யும் ராஜபக்«க்ஷவின் விருப்பமா?11) அசன் அலி மட்டும் ராஜபக்ஷே உடன் நட்பு வைத்துள்ளாரா? பிற காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் தொடர்பு உள்ளதா? (ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது எழுதிய கடிதம்)12) விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்ற ‘குற்றத்திற்காக’ வைகோ, சீமான், அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழனைக் கொலை செய்யும் சிங்கள அதிபர் ராஜபக்ஷே உடன் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் யாருக்கும் தெரியாமல் ‘கள்ள உறவு’ வைத்துள்ளனரே? அதற்கு என்ன தண்டனை?13) அசன் அலி இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் அம்சா உடன் எப்பொழுது பேசினாலும் சிங்களத்தில் மட்டும் பேசுகிறாரே. அதற்கு என்ன காரணம்? இருவருக்கும் தாய்மொழி தமிழாக இருந்தும் வேற்று மொழியில் பேச என்ன காரணம்?இதுபற்றி யாரும் அசன் அலியிடம் வினா எழுப்பினால் எந்த மொழியில் பேசினால் என்ன? என்று எதிர்கேள்வி கேட்கிறார். நாம் கேட்பது இதுதான். எந்த மொழியில் பேசினால் என்ன என்று கூறுபவர் தமிழ்மொழியில் ஏன் பேச மறுக்கிறார் என்பதுதான். பேசும் ‘ரகசியம்’ அருகிலிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதாலா?14) இலங்கை துணைத் தூதர் அம்சா இங்கு ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் உல்லாச விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் நடத்தும் பல்சுவை விருந்துகளில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் யார் யார்? அதில் எந்தெந்த காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் பங்கேற்கின்றனர். அதில் என்னென்ன ‘பரிமாறப்’படுகின்றன? இது போன்ற பல வினாக்கள் நம்முன் எழுகின்றன. ஆனால் யாரிடமும் பதில்தான் இல்லை. வாசகர்களாகிய தாங்கள் பதிலை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.ஈழத்தமிழர் பிரச்னையில் இன உணர்வாய் இங்கு எழுச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அசன் அலி, வேலூர் ஞானசேகரன் மற்றும் சில காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் ராஜீவ்காந்தி கொலையைச் சாக்காக வைத்துக் கொண்டு ‘அதீத’ ஆர்வம் காட்டுகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். குறுக்குச் சால் ஓட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் ராஜீவ்காந்தி மீதான பற்று காரணமல்ல என்று அசன் அலி மகிந்தா ராஜபக்ஷே தொடர்பைப் பார்த்தாலே புரிகிறது. தமிழர்கள் அங்கு தனது இனத்தைப் பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பெரும்பாலாக நினைப்பது இங்குள்ள தமிழனின் தார்மீக ஆதரவைத்தான்.ஆனால் இங்கோ சில சில குரல்களைத் தவிர்த்து கனத்த மௌனம் நிலவுகிறது. குரல் கொடுக்கும் கொஞ்சப் பேரும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். தமிழக காங்கிரசாரோ ராஜிவ்காந்தி கொலையை முகமூடியாக அணிந்து கொண்டு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்ஷேஉடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். குழி பறிக்கின்றனர். ஒரு காலத்தில் பெரியார் போன்ற தலைவர்கள், இருந்த தமிழக காங்கிரஸ் இன்று சிங்கள அதிபர் ராஜபக்«க்ஷவின் ஆலோசனை கேட்டுச் செயல்படும் நிலைக்கு மாறிவிட்டது என்பது எவ்வளவு சீரழிந்த நிலைக்கு தமிழக காங்கிரஸ் சென்றுவிட்டது என்பதை அறியலாம்.இறுதியாக ஒன்று மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக காங்கிரஸ் அறிவித்ததற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அசன் அலி இவ்வாறு வருத்தப்பட்டார். எங்களை எல்லாரும் அம்மா (ஜெயலலிதா) காங்கிரஸ் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை என்று வருத்தப்பட்டார். அது தவறு. அவர்களை சிங்கள காங்கிரஸ் என்று அழைப்பதே ஏகப் பொருத்தம். அதைத்தான் அசன் அலி உள்ளிட்ட அவரது ஆதரவு எம். எல். ஏ. க்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர்.
நன்றி; கு.காமராஜ், ;சமுகவிழிப்புணர்வு

மேலாண்மை பொன்னுசாமி

பிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (58) அவர்கள் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலாண்மை பொன்னுசாமியின் "மின்சாரப் பூ' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.
தற்போதும் சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசிக்கிறார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இவரது பிரதான தொழில்.
இவருக்கு மனைவி பொன்னுத் தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.
36 நூல்கள்: மேலாண்மை பொன்னுசாமி இதுவரை 36 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.
இவரது கதைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரான பொன்னுசாமி, தற்போது அந்த அமைப்பின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.


விருது கிடைத்தது குறித்து "மேலாண்மை பொன்னுசாமி கூறியது:

இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. சாகித்ய அகாதெமி விருதை தேர்வு செய்யும் குழுவுக்கு எனது நூல்கள் எதையும் நான் அனுப்பவில்லை. யார் அனுப்பியது என்பதும் எனக்குத் தெரியாது.எனது "மின்சாரப் பூ' தொகுப்புக்கு விருது கிடைத்துள்ளதாக சாகித்ய அகாதெமி விருதுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் தெரிவித்தனர். அப்போதுதான் எனது நூல் விருதுக்காக பரிசீலிக்கப்பட்டதே எனக்குத் தெரியும்.
இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது கிராமத்து எழுத்தாளர்களுக்கு கிடைத்த அங்கீகரமாகக் கருதுகிறேன் என்றார். இவர் தவிர மேலும் 20 எழுத்தாளர்களும் சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
.
நன்றி; அதிகாலை.காம்

Wednesday, December 24, 2008

சுப.வீ



மேடைத்துளிகள் (2008 செப்டம்பரில் சுபவீரபாண்டியன் பல்வேறு ஊர்களில் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய உரைகள்)அண்ணல் அம்பேத்கர் பார்வையில்...

உலகம் எப்படித் தோன்றியது, மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பது குறித்து எல்லா மதங்களும் பேசுகின்றன. குறிப்பாக, கிறித்துவ மதம் கூறும் கருத்தை இஸ்லாம் உட்படப் பல மதங்கள் ஏற்கின்றன. கடவுள் முதலில் ஆதாம் என்கின்ற ஆணைப் படைத்தார், பிறகு அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாள் என்கின்ற பெண்ணைப் படைத்தார் என்பதே மதங்களின் பார்வை. படைப்புக் கொள்கைக்கு மாறான, பரிணாமக் கொள்கையை எந்த மதமும் எடுத்துரைக்கவில்லை. எடுத்துரைக்கவும் முடியாது. எனினும், முதல் ஆணையும், முதல் பெண்ணையும் கடவுள் படைத்தார் என்றுதான் மதங்கள் கூறுகின்றன. ஆனால், உலகிலேயே, நால்வருணங்களாக மனிதர்களைக் கடவுள் படைத்தார் என்று இந்துமதம் மட்டுமே கூறுகின்றது.இது குறித்த ஆழ்ந்த ஆய்வினை அண்ணல் அம்பேத்கர் நிகழ்த்தியுள்ளார். ரிக் வேதத்தின் 10 ஆவது இயலான புருஷசூக்தத்தில் கடவுளின் நெற்றி, தோள், இடை, பாதம் ஆகியனவற்றிலிருந்து பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர வருணங்கள் தோன்றியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது ‘இடைச்செருகல்’ என்பது அம்பேத்கரின் கருத்து. இருப்பினும், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வருணம் வருணமாகப் படைக்கப்பட்டனர் என்னும் இந்துமதக் கருத்தியல்தான், இன்றைய சக ஏற்றத்தாழ்வுகளின் அடித்தளம் என்பதை அவர் நிறுவியுள்ளார். இந்த ஏற்றத்தாழ்வை நிறுவுவதே பகவத்கீதையின் நோக்கம் என்பதையும் அவர் ஆதாரங்களுடன் காட்டியுள்ளார்.எனவே, உலகெங்கும் உள்ள ‘தொழில் பிரிவு’, இந்தியாவில் மட்டும் ‘தொழிலாளர் பிரிவு’ என ஆக்கப்பட்டது. அதுவும், வெறும் பிரிவாக அல்லாமல், ஒருவரின் கீழ் ஒருவர் என்னும் வகையில் அடுக்காக ஆக்கப்பட்டது. அந்த அடுக்கு எவ்வாறு இருந்ததெனில், ‘படிப்படியான சமநிலை அற்றதாக’ இருந்தது என்பார் அம்பேத்கர்.தனி மனிதனைப் படைக்காமல், வருணங்களைப் படைத்த கடவுள் (“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்”-பகவத்கீதை ), ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு தொழில் உரியது என்றும் ‘விதித்துவிட்டார்’ என்பதே இந்துமதத் தத்துவம். நான்கு வருணங்கள், நாலாயிரம் சாதிகள் ஆயின. பிறகு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் என்றாயிற்று. இன்று வழக்குரைஞர்களாக உள்ள நாங்கள் எல்லோரும் ஒரே சாதியினர் இல்லையே என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். சாதிக்கும், தொழிலுக்குமான பிணைப்பு, நூற்றாண்டுகள் போராடிய பின்பு, இன்று அறுபட்டுள்ளது. அதுவும் கூட, இடைநிலையில் மட்டும்தான் அறுபட்டுள்ளது. மேலும், கீழும் நிலை மாறவில்லை.கோயில் அர்ச்சகர்களாக, புரோகிதர்களாகப் பார்ப்பனர்களே உள்ளனர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் புரட்சித்திட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுபோன்றே, பிணம் எரித்தல், பறை அடித்தல், மலம் அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் ஆகிய தொழில்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன. சாதியும், தொழிலும் அங்கே அறுபடவில்லை. இப்பிணைப்பின் காரணமாக, சாதி அடிப்படையிலேயே தொழில்களுக்கான முதலீடுகள் செய்யப்பட்டன. இன்றும், கிராமங்களில் உற்பத்தி ஒழுங்கு முறையில் சாதி ரீதியான முதலீடுகளே உள்ளன. அவை, வர்க்கப் போராட்டத்திற்கு வழிவிடாத தடைச்சுவர்களாக உள்ளன.தொழிலாளி என்பவன் தொழிலாளியாக மட்டுமில்லாமல், சாதியப் பாகுபாடுகளுக்கு உரியவனாகவும் இருக்கிறான். அதனால்தான், தொழில் வளர்ச்சி பெற்ற இடங்களிலும் கூட, சாதியின் ஆதிக்கம் குறையாமலே இருக்கிறது. ஆகவே, வருண-சாதி அமைப்பை அழித்து ஒழிக்கப் பாடுபடுவதே இன்றைய முதல் தேவையாக உள்ளது.(23.09.08 - கோவை, வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரையிலிருந்து)சலியாத மனமே அழியாத சொத்து‘கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை’ என்று கவிஞர் சுரதா கூறியதுபோல, இன்றும் அதிகாலை எழுந்து நள்ளிரவு வரை உழைக்கின்ற தலைவர் கலைஞரின் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நான்கு கூறுகள் குறித்து இதுவரை கூறினேன். கூர்த்த மதி, கூடுதலான உழைப்பு, நெஞ்சு உரம், நிருவாகத் திறன் எனப்படும் அந்நான்கு கூறுகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளையும் நாம் பார்த்தோம். ஆனால் அவற்றையும் தாண்டி இன்னும் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாய்ப் படுகின்றது.‘சலிப்படைவது’ என்னும் குணம், எந்த ஒரு மனிதனுக்கும் இயல்பானது. சலிக்கும் கால அளவு, ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனாலும் எதன் மீதும் நமக்குச் சலிப்பு வந்தே தீரும். நமக்கு மட்டுமல்ல, மாபெரும் தலைவர்களுக்கும், போர் வீரர்களுக்கும் கூடச் சில நேரங்களில் சலிப்பு வந்து விடும். எண்பதுக்கும் மேற்பட்ட போர்க்களங்களைக் கண்ட நெப்போலியனுக்குக் கூட, ஒரு கட்டத்தில் போர் சலித்தது. செயின்ட் ஹெலினா தீவிலிருந்து (சிறை) தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அந்தச் சலிப்பை நாம் பார்க்க முடிகிறது.அரும்பெரும் தியாகங்களை எல்லாம் செய்து, நாட்டின் விடுதலைக்காய்த் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அரிய தலைவர் வ.உ.சி.க்குக் கூட, இறுதி நாள்களில் அரசியல் சலித்தது, இலக்கியம் நோக்கிச் சென்றார். சிறுகதை மன்னன் என்று அறியப்படும் ஜெயகாந்தன் அண்மையில் எழுதிய சிறுகதை எதையும் காண முடியவில்லை. ஜெயகாந்தனுக்குச் சிறுகதை சலித்திருக்கலாம். ஆனால், 85 வயதான பின்னும், அரசியல் சலிக்கவில்லை, இலக்கியம் சலிக்கவில்லை, சமூகச் சிந்தனை சலிக்கவில்லை. இப்படி ஒரு மனிதர் நம்மிடையே உண்டென்றால், அவர் கலைஞர்தான்.இயல்பாகக் குழந்தைகள்தான் எதிலும் சலிப்படையாமல் இருப்பார்கள். ஒரே விளையாட்டைப் பலமுறை திருப்பித் திருப்பி விளையாடுவார்கள். சலிக்காது. வயது ஏற ஏற, சலிப்படையும் மனமும் வளர்ச்சியடைகிறது. ஆனால் கலைஞரோ விதிவிலக்காக இருக்கிறார். அரசியலில் ஆயிரம் நெருக்கடிகள், நடக்கவே சிரமப்படும் உடல் என எல்லாச் சிக்கல்களுக்கு மிடையில், நாள்தோறும் அவர் எழுத்திலும், பேச்சிலும் காணப்படும் நக்கல், கேலி நையாண்டிகள் எதைக் காட்டுகின்றன. சலியாத மனம் ஒன்று, அவரிடம் அழியாத சொத்தாக உள்ளது என்பதைத்தானே! அந்த மனம்தான் அவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்று நமக்குத் தோன்றுகிறது. அந்த குணம், அய்யா பெரியாரிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.(16.09.08 - சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து )பார்ப்பான் என்றால்...நாகர்கோயிலில், செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற பிராமணர் சங்க மாநாட்டில், கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் காலையில் நான் கூறிவரும் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். “அவன் ஒரு பேராசிரியனாம், என்ன தெரியும் அவனுக்கு? பார்ப்பான், பார்ப்பான் என்கிறானே, பார்ப்பான் என்றால் என்ன தெரியுமா?எதையும் சிந்தனை செய்து பார்ப்பான் என்று அர்த்தம்” (அடேயப்பா!) என்று பொருள் சொல்லியுள்ளனர். இன்னொருவர் பேசும்போது, அந்த ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ நிகழ்ச்சியை உடன் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் பெருமக்கள் பலர் என்னைப் பாராட்டியுள்ளனர். எனினும், அப்போதெல்லாம் ஏற்படாத மகிழ்ச்சி, இப்போதுதான் எனக்கு ஏற்பட்டுள்ளது.பிராமண சங்கம் இவ்வளவு கடுமையாய் எதிர்க்கிறது என்றால், நம் பணியை நாம் சரியாகச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதானே பொருள்!(27.09.08 - சென்னை, முகப்பேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்)இருக்கவே இருக்கிறார்கள் நம் இடதுசாரித் தோழர்கள்பெரியாரிடம், அண்ணாவிடமும் இருந்த அரசியல் இன்று விஜயகாந்திடமும், வடிவேலிடமும் வந்து சேர்ந்திருக்கிறது. நடிகர்கள் நாடாளக்கூடாது என்பதோ, அவர்கள் அரசியலுக்கே வரக்கூடாது என்பதோ நம் கருத்து அன்று. அது பிற்போக்குத்தனமானது. அனைவரும் அரசியல் தளத்திற்கு வரவேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் விஜயகாந்திற்கும், வடிவேலுவிற்கும் இடையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போட்டி அரசியல் தொடர்பானதா என்பதுதான் நம் கேள்வி. இவர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார், அவர் எதிர்க்கிறாரா அல்லது அவர் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்,இவர் மறுக்கிறாரா என்பதே நம் கேள்வி. இவர் காரின் கண்ணாடிக் கதவை அவர் உடைத்தார், அவர் வீட்டு சன்னலை இவர் உடைத்தார் என்பதெல்லாம் அரசியலாக முடியுமா? இதை வைத்து அவர்கள் அரசியல் நடத்துவதும், அதை இங்குள்ள ஊடகங்கள் எல்லாம் ஊதிப் பெருக்குவதும் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்யும்? போகிற போக்கைப் பார்த்தால், வடிவேலுவும் தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போலிருக்கிறது. அப்படி அவர் கட்சி தொடங்கினால் அவரை யார் ஆதரிப்பார்கள் என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. அவரோடும் கூட்டணி குறித்துப் பேச நம் இடதுசாரித் தோழர்கள் வராமலா போய்விடுவார்கள்! விஜயகாந்தின் வீட்டில் காத்திருந்த நம் தோழர் வரதராஜன், வடிவேலு வீட்டிற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க மாட்டாரா என்ன?(20.09.2008 அன்று திருப்பூரில், பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில். )விநாயகர் சதுர்த்திமத நம்பிக்கை என்பது வேறு. மத அரசியல், மத வன்முறை என்பன வேறு. பிள்ளையார் சதுர்த்தி என்று ஒரு விழா நெடுங்காலமாகத் தமிழ் மக்களின் வீடுகளில், வீட்டு விழாவாக நடைபெற்று வந்தது. அதுவே மெல்ல மெல்லத் தெருவுக்கு வந்து, இப்போது பல கலவரங்களுக்குக் காரணமாகியிருக்கிறது.
பிள்ளையார் பக்தி, பிள்ளையார் அரசியலாக உருவெடுத்து, பிள்ளையார் வன்முறைக்கு வழிவிட்டிருக்கிறது. இது தற்செயல் நிகழ்வு அன்று, திட்டமிட்ட சதி.இப்படித்தான் சேதுக் கால்வாய்த் திட்டத்திலும் இப்போதும் இந்துத்துவ குறுக்கீடு நேர்ந்துள்ளது. மத நம்பிக்கை சரியா, தவறா என்பது வேறு. ஆனால் அந்த நம்பிக்கை ஒரு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் குறுக்கிடுவதை முற்போக்குச் சிந்தனையாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வீட்டிலிருக்க முடியாது. அது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. உணர்ச்சியூட்டப்பட்ட காரணத்தால், ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்ட பொழுது, துள்ளிக்குதித்து எழுந்த நம் மக்கள், அடுத்த தலைமுறைக்கு அரும்பயன் தரக்கூடிய சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு இடையூறு நேர்ந்த நேரத்தில் வாய்மூடி இருந்தது ஏன்? அவர்களிடம் அந்தச் சிந்தனையை, விழிப்புணர்வை நாம் தானே உருவாக்க வேண்டும்.(3.10.2008 அன்று திருச்சியில் நடைபெற்ற மனித உரிமை உயிர்ப்பியக்கம் கூட்டத்தில்.
நன்றி
சுப.வீ]
கருஞ்சட்டைதமிழர்