Saturday, April 11, 2009

கம்பிகளை தாண்டி வீசும் காற்று


திமிங்கிலம்
ஆழ ஆழ
அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!

(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.

கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும். அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இனமானத்திற்கான கருத்தைப் பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே, பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர் விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம்.

புதுவையில் அண்ணன் சீமானைக் காண புறப்பட்டபோது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலைத் தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர், பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது.

தமிழ் பெரியவர் இறைக்குருவனார், இயக்குநர் அமீர் மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.நான் சிறை வெளிவாயிலில் இருந்த வாயிற்காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன். மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார்.

நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்டபோது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலைபேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில், என்னைப் பேசச் சொல்லி அலைபேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார்.

மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்.பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலை நீடித்தது. ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன. பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்துப் பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.

எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர். தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களைப் பெற்று என்னிடம் அளித்தார்.

தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.

சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

நானும், வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து, அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை.

இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வுவயப்பட்ட நிலையில் இருந்தேன்.அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும், வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களைத் தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானைப் பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம், எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும், வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்துப் பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம்.

ஆனால் நிபந்தனை..

புத்தகங்கள் கொடுக்க கூடாது. வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார்.என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்.... அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் .. இனத்திற்காக, இன அழிவினைக் கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனைப் பார்த்து விடுவோம். மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்... எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன.இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இரும்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது. உள்ளே மங்கலான வெளிச்சம். வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில்.. வாருங்கள் வழக்கறிஞர்களே... என்ற குரல்..தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ... என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ.. பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ.... மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ ... அதே குரல்...குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா. அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன. தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.அங்குதான்.. தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார். நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்... இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன்.

ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம்.. பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.ஒரு சிறைச்சாலையில்... சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ, அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ... இருக்க முடியவில்லை. மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து... எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப்பட்டு... மீறி எழும் இனமான உணர்வினையும்.. சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்... சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்... அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.என் புலன்கள் என்னையும் மீறி... ஆதிச்சுழியாய்.. சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன். அண்ணனும் கலங்கி.. நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.

அப்பா.. எப்படியிருக்கார்.. திமுககாரர் .. அவரிடம் வம்பு வளர்க்காத.. பாவம்டா அவரு..

என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்.. அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா... தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை, கலங்குவதை கவனித்துக் கொண்டும், பதிவு செய்துக் கொண்டும் இருந்தன... நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன். விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்னபோது அவரின் முகம் இறுகியது.சுற்றி நின்ற காவலர்களைப் பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னைப் பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள்... அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.. பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள். இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்கக்கூட எனக்கு அனுமதியில்லை. .ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான். எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர். அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்.. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்டபோது அவர்களிடம் பதிலில்லை.எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார். அந்த தாளை என்னிடம் அளித்து, கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார். நானும் அதை பெற்று மடித்த போது.. மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர். அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம். வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்கப் பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும், உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார். மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்.. நீங்கள் எங்களுக்கு வேண்டும்.. கொள்கையாய்.. வழிகாட்டியாய்.. ஆசானாய்.. உறவாய் என்றேன்.கண்டிப்பாக.. என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது.

காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர். மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்... ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?

விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்.... அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா?

இந்த நாட்டில் துரோகி கருணாவைப் பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்.பி. தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு.மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே... தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே.. காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே... ஏனய்யா.. .உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது.. அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..? அவனின் உண்மையும், தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது? அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?வண்டி கிளம்பியது. கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன். காற்று வேகமாக வீசியது.. அந்த காற்று.. .சிறை மதிற்சுவர்களை தாண்டியும் வீசும்.காற்றை கைது செய்ய முடியுமா என்ன?. -


மணி.செந்தில், கும்பகோணம் (advmsk1@gmail.com)

நன்றி :கீற்று

மணி-செந்தில்

Thursday, February 12, 2009

துரோகிகளுக்கு அஞ்சலி


அய்யானார் கோயிலில்
உனக்கான டிசம்பர் பூக்கள்
பூத்துகிடக்கிறது...

வருகிற பதினாலாம் தேதிக்குள்
நீ வந்துவிடு என் செல்லமே.

காதல் பரிசாக
கொடுக்க வைத்திருந்த
பூக்களையெல்லாம்...

என் அண்ணன் தம்பிகள்
அங்கே போராடிக்கொண்டிருக்கும்போது,
இங்கே
அரசியல்விளையாட்டு
விளையாடிக்கொண்டிருக்கும்
நம் தமிழன
துரோகிகளின்
புகைப்படங்களுக்கு
அஞ்சலி செலுத்துவோம்..

Tuesday, February 10, 2009

தகிக்கும் நெருப்பு!

ஈழப்போரில் இந்திய இராணுவம் - தமிழர்நெஞ்சில்தகிக்கும்நெருப்பு!
சுப. வீரபாண்டியன்

தமிழ்நாட்டில் எழுந்துள்ள தமிழீழ ஆதரவுப் பேரலை, தமிழக அரசியலிலும் சில முக்கியமான திருப்பங்களுக்கு வழி வகுத்துள்ளது.பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணமோ, 48 மணி நேரப் போர் நிறுத்தமோ தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை. மாறாக, நாளுக்கு நாள் அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டுள்ளது.
பட்டினிப் போர், மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கண்டனப் பொதுக்கூட்டம், மாநாடு போன்ற அனைத்து விதமான எதிர்ப்புகளும் பயனற்றுப் போனபின், தமிழக இளைஞர்கள் சிலர் தங்களையே கொளுத்திக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். ‘இனிப் பொறுப்பதில்லை’ என்னும் நிலை எங்கும் பரவிக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழக மாணவர்களிடம், தமிழீழ ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது.

இளைஞர் முத்துக்குமாரின் தற்கொடைக்குப் பிறகு, ஈழ ஆதரவு மேலும் கூர்மையடைந்துள்ளது. ஆனால் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சட்டமன்றத்தில் சுதர்சனம், யசோதா ஆகியோர் பேசியுள்ள பேச்சு, காங்கிரசின் மீது கடுங்கோபத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒரு பதற்றமான சூழலில் எப்படிப் பேச வேண்டும் என்னும் பக்குவம், 125 வயதாகிவிட்ட காங்கிரசுக் கட்சியின் தலைவர்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

1965 ஆம் ஆண்டு, தமிழக மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் காங்கிரசின் மீது எவ்வளவு கோபம் கொண்டிருந்தார்களோ, அதற்குச் சற்றும் குறையாத, சினமும் சீற்றமும் இன்று காணப்படுகிறது. 65 ஆம் ஆண்டிலாவது, இந்தி திணிக்கப்பட்டது ; அவ்வளவுதான். ஆனால் இன்றோ தமிழ் இனமே அழிக்கப்படுகின்றது.

அது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும், அவ்வரசின் இறையாண்மையில் நாம் தலையிட முடியாது என்றும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது கேலிக்குரியதாகும். எப்போது ஒரு நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி, இன்னொரு நாட்டிற்குள் அகதிகளாக நுழைகின்றனரோ, அப்போதே அது உள்நாட்டுப் பிரச்சினை என்னும் நிலையைக் கடந்து, உலகப் பிரச்சினையாக ஆகிவிடுகிறது. அதே போல, நாட்டை ஆளும் அதிகார உரிமைதான் இறையாண்மையே அன்றி, சொந்த மக்களையே எறிகுண்டு வீசியும், பீரங்கிகளால் தாக்கியும் கொன்றழிப்பது இறையாண்மை ஆகாது.

இன்று அங்கே நடப்பது, தமிழின அழிப்புத்தானே தவிர, போர் அன்று.

இந்திய அரசு தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அந்த விருப்பத்தை இந்திய அரசு மயிரளவும் மதிக்கவில்லை. அங்கு கிரிக்கெட் போட்டிக்கு ஆள் அனுப்புகிறது. மேலும் இப்போது அங்கிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்க்கும் போது, பின்னாலிருந்து போரை நடத்துவதே இந்திய அரசும், ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான் என்று தோன்றுகிறது. உளவுக் கருவிகள், டேங்குகள், ராடார் போன்றவைகளைக் கொடுத்துச் சிறீலங்கா அரசுக்கு உதவியது மட்டுமின்றி, இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை? அங்கே புலிகளின் தாக்குதலில் இறந்துபோன அதிகாரிகளில் சிலர் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நம் அத்தனை பேருக்கும் அவமானம் இல்லையா ?

இன்னொரு முகாமையான செய்தியையும் இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.இப்போது அங்கு கொல்லப்படுவது, ஈழ மக்கள் மட்டுமில்லை...அவர்களில் சரி பாதிப் பேர் இந்திய மக்கள். ஆம்... மலையக மக்களில் ஒரு பகுதியினரும் அங்குதான் உள்ளனர்.

பண்டா - சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பின் ஒரு பகுதி மலையக மக்களுக்கு இந்தியாவும், இன்னொரு பகுதி மக்களுக்குச் சிறீலங்காவும் குடியுரிமை வழங்கின. இந்தியக் குடியுரிமை பெற்ற மக்கள், தமிழ்நாட்டில் உதகை மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, நடுவட்டம் போன்ற பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இலங்கைக் குடியுரிமை பெற்ற மலையக மக்கள், வவுனியா, கிளிநொச்சிப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இன்னும் பல லட்சக்கணக்கான மலையக மக்கள் நாடற்றவர்களாகவே உள்ளனர் என்பது ஒரு வேதனையான செய்தி.

ஆக, 40 ஆண்டுகளுக்கு முன் கிளிநொச்சிப் பகுதியில் குடியேற்றப்பட்ட, இந்திய வம்சா வழியினரான மலையக மக்கள்தாம் பெரும்பகுதியாக முல்லைத் தீவில் சரண் அடைந்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முயல்வதன் மூலம், இந்திய அரசு தன் சொந்த மக்களையே அழிக்கத் துணை போகிறது என்றுதான் பொருள். அங்கு தஞ்சம் புகுந்துள்ள ஈழ மக்களும், மிக ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள்தாம். ஓரளவு வசதியான மக்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே புலம் பெயர்ந்து சென்று விட்டனர். மீதமிருக்கும் ஏழை மக்களான ஈழ மக்களும், மலையக மக்களும்தான் பல்வேறு சித்திரவதைகளுக்கும், படுகொலை களுக்கும் இன்று ஆளாகி அல்லல்படுகின்றனர்.

அந்த இலட்சக்கணக்கான மக்களை புலிகள்தான் பிடித்து வைத்துள்ளனர், கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளைச் சிலர் கூறிவருகின்றனர். அதே ஆட்கள்தான், முல்லைத் தீவில் ஆயிரம் புலிகள் மட்டுமே உள்ளனர் என்றும் சொல்கின்றனர். இப்போது இரண்டு கேள்விகள் நம்மிடம் எழுகின்றன. என்னதான் ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றாலும், ஆயிரம் பேர், ஐந்து இலட்சம் மக்களைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியுமா ? அடுத்ததாக, எறிகணைத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பகுதியில், மக்களை எப்படிக் கேடயங்களாகப் பயன்படுத்த முடியும் ? அங்கு என்ன கத்திச் சண்டையா நடைபெறுகிறது ?

எனவே, இப்படிப்பட்ட காரணங்களை எல்லாம் சொல்லிக்கொண்டு, போருக்குத் துணை போவதும், மறைமுகமாகப் போரை நடத்துவதும், காங்கிரசுக் கட்சியைப் படு பாதாளத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். காங்கிரசின் மீது மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏற்பட்டபின், அக்கட்சியைக் கூட்டணியாக வைத்துக் கொள்வது, ஈரப் பொதியைச் சுமப்பதாக ஆகிவிடும் என்னும் உண்மை, தலைவர் கலைஞருக்குப் புரியாமல் இருக்காது.

இன்றைக்கு எழுந்துள்ள தமிழீழ ஆதரவுச் சூழலை, எதிர்க்கட்சிகள் தி.மு.க.விற்கும், கலைஞருக்கும் எதிராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. முத்துக்குமார் மரணம் கூட அரசியலாக்கப் படுகிறது என்பது உண்மைதான். அதனால்தான் அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அரசு கொடுக்கும் பணம் மறுக்கப்படுகிறது.
இந்நிலைக்கான ஒரே மாற்று, ஈழ ஆதரவை மேலும் வலிவாகத் தன் கையில் கலைஞர் எடுத்துக் கொள்வது மட்டுமே! அவர் முன்வந்து முழங்கிய பின்புதான், மனிதச் சங்கிலி மைல் கணக்கில் நீண்டது. ஐம்பது ஆண்டுகளாக அவர் ஈழ ஆதரவாளராகவே இருக்கிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது மிக முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நின்று கொண்டுள்ளோம். ஆளுங்கட்சியாய் இருப்பதில் பல சங்கடங்கள் உண்டுதான். ஆனால் எல்லாவற்றையும் மீறி , ஈழ ஆதரவை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. அப்படிச் செய்தால் வரலாறு என்றும் அவரைப் போற்றும்!

இல்லையேல், என் போன்ற கலைஞரின் ஆதரவாளர்களை வரலாறு தூற்றும்.
நன்றி; சுப.வீரபாண்டியன்,
கருஞ்சட்டைத்தமிழர், கீற்று.

Monday, February 09, 2009

மானம் கெட்டவனுங்க




மீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற தங்கர் பச்சானின் "கார்த்திக்-அனிதா"திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில் தங்கர் பச்சான் பேசிய ஆவேசப் பேச்சு திரையுலத்தினரை திக்கு முக்காட வைத்துள்ளது. அவர் பேசியதாவது :


நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை, 36 வருடங்களாக என் தமிழினம் தமிழீழத்தில் செத்துக்கொண்டுள்ளது. குறைந்தபட்சம் அவர்களின் வாழ்க்கையை வைத்து என்னால் ஒரு படம் எடுக்க முடிந்ததா?

ரொம்ப வருடங்கள் கஷ்டப்பட்டு அவர்களின் வாழ்க்கைக் கதையைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தற்போதுதான் ஒரு கதையை உருவாக்கினேன். இதற்காக நான் கிட்டத்தட்ட 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அந்தக் கதையில் நடிக்க எந்த நடிகனும் முன் வரவில்லை.

"நான் கதை சொல்லி, எவன் எவனெல்லாம் அந்தப் படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னானுங்களோ, அவ்வளவு பயலுகளும், நடிகர் சங்கம் நடத்துன உண்ணாவிரத மேடையில ஒக்காந்துருந்தானுங்க".

இதுல பேருக்கு முன்னாடி புரட்சி, தளபதி-ன்னு வேற போட்டுக்கிறானுங்க! மானங்கெட்ட பயலுங்க.... இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே இல்ல. இப்ப இந்த மேடையில சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க..... இனிமே எந்தப் பயலாவது பேருக்கு முன்னாடி புரட்சி, தளபதி -ன்னு பட்டப் பேரு போட்டுக்கிட்டீங்க.......
"அவ்வளவுதான்.
எவனும் போடக்கூடாது".
உண்மையான புரட்சின்னா அது முத்துக்குமரன் செஞ்சதுதான்.... அவனோட தியாகத்துக்கு முன்னாடி நான் வெட்கி தலை குனிகிறேன்! அதுனால எல்லாரும் தீக்குளிச்சுட்டு சாவுங்க-ன்னு சொல்லல.... அவன மாதிரி உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்த ஆதரிக்க கத்துக்கங்க... என்றார். பார்வையாளர்கள் சில நொடிகள் கைதட்ட மறந்து முகத்தில் ஈயாடாமல் அமர்ந்திருந்தனர்.

“ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி”


அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..ஆனால் போலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...காட்டுக்குள் ஓடி விடும்..
இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியவில்லை....
புலியின் அட்டகாசமும் குறையவில்லை
கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு ஒன்றும் நடத்தப்பட்டதுஅதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...
சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...
கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...அங்கே அவை கண்ட காட்சி.............
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்ததுகீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?அதற்கு பன்றி"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25 வருடமா இதைத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு..............

"ஆண்ட பரம்பரை" - "நாங்க மீண்டும் ஆள நினைப்பது எப்படி குற்றமாகும்..." சொல்லுங்கள் தோழர்களே???????

Tuesday, February 03, 2009

உண்மையான தமிழ் இன தலைவர் முத்துகுமாருக்கு வீரவணக்கம்
















உண்மையான தமிழ் இன தலைவர் முத்துகுமாருக்கு வீரவணக்கம்;
தமிழர்களை கொன்றொழிப்பதற்கு சிங்களத்திற்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கி வரும் இந்திய அரசின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறது மாவீரன் முத்துக்குமாரின் வீரமரணம்.
கொலைகார இலங்கைக்கு கூட்டாளியாக செயல்பட்டு வரும் இந்தியாவை மட்டுமல்லாமல் அந்த அரசுகளின் காலை நக்கிக்கொண்டு தமிழர்களை அடுத்துக் கெடுக்கும் 'தமிழினத் தலைவர்களின்[தறுதலைகளின்] முகத்திரையை கிழித்திருக்கிறது அவரது மரணம்.தீவிரவாதத்தை எதிர்ப்பதாக பம்மாத்துக் காட்டிக்கொண்டு தமிழ்மக்களின் மீதான இலங்கை அரசின் இனவெறி போரை நியாயப்படுத்தும் பயங்ரவாதிகள் பாசிச ஜெயா, பார்ப்பன வெறியன் சோ, ஹிந்து ராம், இன்னுபிற துரோக கதர் வகையறாக்களின் முகத்திலறைந்திருக்கிறது மாவீரன் முத்துக்குமாரின் வீரமரணம்.மனு கொடுப்பது பிரச்சணைகளுக்கு தீர்வாகாது, மக்களே! இளைஞர்களே!! களத்தில் இறங்குங்கள் அன்று அறைகூவி அழைத்திருக்கிறது மாவீரன் முத்துக்குமாரின் வீரமரணம்
தோழர். முத்துக்குமார் மரணத்தை தழுவதற்கு முன்னால் விநியோகித்த அரசியல் கூர்மையோடு எழுதப்பட்ட துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது!!
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள்.
இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).
பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.
தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.
‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்.
இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா -
என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே.

ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்
அநீதிகளுக்கெதிரான
உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார்,
கொளத்தூர்,
சென்னை-99

அண்ணன் சீமானின் கோபம்

அண்ணன் சீமானின் கோபம்.


ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து இரண்டு முறை கைதான என் அண்ணன் சீமான் அதே ஆவேசத்துடன் கொடுத்த பேட்டி...'
'சிறை அனுபவம்..?''''
வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். 'சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க' என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சிறையில் இருந்தது என்னுடைய பேறு!
''''காங்கிரஸ் கட்சி உங்கள் மீது அதிகப்படியான கோபத்தைக் காட்டுகிறதே?''''
அதைவிட அவர்கள் மீது எனக்கு அதிகக் கோபம் இருக்கிறது. சில கல் தொலைவில் என் உறவுகள் கஞ்சிக்குச் செத்து, காட்டுக்குள் தஞ்சம் புகுந்து, எப்போது தலையில் குண்டு விழுமோ என்று தவித்துக்கிடக்கும் சோகத்தை, மேடை போட்டுச் சொல்கிற சீமான் பயங்கரவாதியாம். என் வீட்டு வாசலில் நின்ற காரைக் கொளுத்தி தீபாவளி கொண்டாடிய காங்கிரஸ் காரர்கள் மிதவாதிகளாம். நான் பேசும் கருத்து தவறு என்றால், நீயே மேடை போடு. நான் வருகிறேன். பதில் சொல். அதை விட்டுவிட்டு காரைக் கொளுத்துவது, கைது செய்யச் சொல்லி ஈனஸ்வரத்தில் சுப்ரபாதம் பாடுவதெல்லாம் பாரம்பரியக் கட்சிக்கு அழகா?என் அப்பனும் ஆத்தாளும் காலங்காலமாக ஓட்டுப் போட்ட சின்னம் கை சின்னம். எனக்கு யாரும் தேசியத்தைக் கற்றுத்தர வேண்டியதில்லை. எனது சொந்தங்களில் பலர் எல்லையைக் காக்க நின்றுகொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தேசபக்தியைக் கற்றுத் தரும் காங்கிரஸ்காரர்கள் வீட்டில் எத்தனை பேர் ராணுவத்தில் இருக்கிறார்கள்? பட்டியல் தருமா சத்தியமூர்த்தி பவன்? 40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத இயலாமையில் புலம்புகிறார்கள். விட்டுத் தள்ளுங்கள்!
''''ராஜீவ் மரணத்தை அவர்கள் ஒரு காரணமாகச் சொல்கிறார்களே?''''
ராஜீவ் மரணம் கொடுமையானது. அதில் சந்தேகமே இல்லை. அதைவிடக் கொடுமையானது அமைதிப் படை செய்தவை. ராஜீவைக் கொன்றவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே... காந்தியைக் கொன்றவர்களைப் பற்றி, இந்திராவைக் கொன்றவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? எந்தப் பிழையும் கடந்து போகும். எந்தக் காயமும் ஒரு நாள் ஆறும். அது ஓர் இழப்பு. அந்த இழப்புக்காக ஓர் இனம் நித்தமும் சாவதை எப்படிச் சமப்படுத்துகிறீர்கள்?'
'''அமைதிப் படை விவகாரங்களை இப்போது கிளப்பித் தேவையில்லாத சிக்கல்களை நீங்கள் உருவாக்குவதாகச் சொல்கிறார்களே?''''
தேவையானதைத்தான் நான் பேசுகிறேன். ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி பேசினால் அமைதிப் படையின் கொடுமைகளைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். அதை எம் தமிழன் ஏற்பதால்தானே ஆயிரக்கணக்கில் கூடுகிறான்? என் குரலுக்கு மரியாதை இல்லையென்றால், பொருட்படுத்த வேண்டாம். ஏன் 'கைது செய், கைது செய்' என்று கத்துகிறீர்கள். என் பேச்சு, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தா? எனக்கு அவ்வளவு செல்வாக்கா? காங்கிரஸ் சொன்ன பிறகுதானே எனது பலம் எனக்குத் தெரிகிறது
.''''வெறுமனே உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதால் என்ன லாபம் என்கிறார்களே?''''
உணர்ச்சி இருப்பதால் வயப்படுகிறேன். இல்லாதவர்கள் என்னைத் திட்டுகிறார்கள். பேசாமல் எனது பிரச்னையை எப்படிச் சொல்ல முடியும்! இலங்கை ஜனநாயக நாடல்ல, அது மதச் சர்வாதிகார நாடு என்று எடுத்துச்சொல்வது உணர்ச்சிவயப்படுவதா? அறிவும், ஆற்றலும், புலமையும், திறமையும் வாய்ந்த தமிழ்த் தலைவர்களை ஒரு காட்டுமிராண்டி, கோமாளி என்று திட்டும்போது உணர்ச்சியற்ற பிண்டமாக என்னால் இருக்க முடியாது.'
'''இலங்கையை மதச் சர்வாதிகார நாடு என்றீர்கள். அங்கு பாதிக்கப்படுவது இந்துக்கள் என்று சொல்லி பாரதிய ஜனதா ஆதரவு தெரிவிப்பதை ஏற்கிறீர்களா?'''
'நான் சாதி, மதத்துக்கு எதிரானவன். ஆனால், என் இனத்தவன் சாகும்போது அவனுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை என்னால் புறந்தள்ள முடியாது. காங்கிரஸ் செய்யத் தவறியதை, இல.கணேசன் சொல்லி வருவது வரவேற்கத்தக்கது.''''ஒரு சினிமாக்காரர் தனது படங்களின் மூலம் பேசப்படுவதைத் தாண்டி, அதீத அரசியல் ஆர்வம்கொள்வது சரியா?''''நான் என் சுயநலத்துக்காகவோ, எனக்கு ஓட்டு கேட்டோ பேசவில்லை. என் இனத்துக்காகப் பேசுகிறேன். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், பிரபாகரனைப் படித்த என்னால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இலங்கை நிலவரங்களை நினைத்தால் கண்மூடித் தூங்க முடியவில்லை. படம் எடுப்பதுதான் என் தொழில். ஆனால், தமிழன் அல்லல்படும்போது படம் எடுத்துக்கொண்டு இருக்க முடியாது. இதையெல்லாம் பேசுவதால் என் தொழில் பின்னடைவு ஆவது உண்மைதான். என் நண்பர்களே என்னிடம் பேசப் பயப்படுகிறார்கள். 32 நாட்களாகப் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. என் உணர்வு அறிந்த தம்பிகள் என்பதால் காத்திருந்தார்கள். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பது உண்மைதான். இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சொந்த ஊரில் ஒரு வீடு கட்டித் தரக் கேட்கிறாள் என் தாய். அண்ணன் பிரபாகரன் நாடு கேட்டுப் போராடுகிறான். என் தாய் வீடு கேட்டுப் போராடுகிறாள். இதற்கு மத்தியில்தான் என் வாழ்க்கை இருக்கிறது. சராசரியாக வாழ்ந்து செத்துப் போக விரும்பவில்லை இந்தச் சீமான்.'
'''அடுத்த படம்..?''''
சில வாரங்களில் ஆரம்பமாகிறது. பெயர்: சீமானின் 'கோபம்'!'' - சிரித்தபடி முடிக்கிறார் சீமான்!