Wednesday, June 16, 2010

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்





இரத்தின புகழேந்தி


நான் பள்ளிக்கூட நாட்களில் கவிதை புத்தகம் ஏதாவது இருந்தால் தாருங்கள் என கேட்க ,அறிவுமதியின் "ஆயுளின் அந்திவரை"யை எனக்கு கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டவர் , அந்த புத்தகத்தை படித்துவிட்டு நானும் கவிதை எழுத ஆரம்பித்த அந்த நாள்,
எங்க அப்பாவிடம் அடிவாங்கிய நாள் தான் நான் எழுத வேண்டும், சினிமா துறைக்கு போகவேண்டும், என்று கங்கணம் கட்டிக்கொண்ட நாள்......

பிறகு இவரின் "மண்கவுச்சி" தான் என் திரைக்கதைக்கான முதல் களம், தொடர்ந்து இவருடைய அனைத்து படைப்புகளும் எனது காட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாக இன்றுவரை இருக்கிறது..நான் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கு இவரும்,கண்மணியும் அறிமுகமில்லாத நண்பர்கள்..

இவரின் அன்பும், வாழ்த்துகளும் எனக்கு பெரிய ஒத்தாசை...முல்லை நில சிறுவர்கள் விளையாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தளார்,எங்கள் ஊர் படைப்பாளிகளில் அறிவுமதியின் முதல் செல்லபிள்ளை படைப்பாளர் இவர்தான்......
பள்ளிஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கிராம அடையாளங்களை தொலைக்காமல் இருக்கவேண்டும் என்ற ஈடுப்பாட்டுடன் இருக்கும் இவரின் படைப்புகள் எல்லாமே தமிழில் மிக முக்கியாமான படைப்புகள் ஆகும்.,


இவரின் படைப்புகள்
1.மண்கவுச்சி
2.நகர்குருவி
3.கிராமத்து விளையாட்டுகள்,
4.தமிழக உணவு முறைகள்,
5.மரபுவழி அறிவுமுறை,
6.வன்னிய சாதிப்பிள்ளைகள்

Saturday, June 12, 2010

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்














சு.தமிழ்ச்செல்வி
1995_96-ம் வருடம், விருத்தாசலத்தில் செராமிக் தொழில் நுட்பக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில். அண்ணன் கரிகாலனோடு பழகிய ஒரு மாலையில் வீட்டிற்கு அழைத்து சென்று அண்ணி சு.தமிழ்செல்வி,குழந்தைகளாக இருந்த சிந்து,சுடரை அறிமுகப்படுத்த, நானும் அவர்கள் வீட்டில் ஒருவனானேன். தினமும், மாலை வீட்டு வாசலில் கொட்டிகிடந்த மணலில் உட்கார்ந்து ஊர்கதை, உலககதையோடு உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்துவார், அப்போது அண்ணி அவர்கள் எழுதிகொண்டிருந்த "அளம், மாணிக்கம்," கையெழுத்து பிரதியாக எடுத்துவந்து படிக்க கொடுத்த போது, முதல் வாசகனானேன், படித்து முடித்ததும் "நேரமே கிடைக்கலைங்க-ம்பி",- அண்ணன் ஆசைக்கு, ஒரு தொகுப்பாவாவது இந்த வருஷம் கொண்டுட்டு வந்துடணும், என்று சொல்லும்போதே தெரியும் பின்னாளில் மிக பெரிய சாதனைகளை செய்ய தயாரகிறார்கள் என்று..
இன்று உலகம் முழுக்க தனக்கென்று வாசகர்களை ,அடுத்த படைப்பு என்ன என்று எதிர்பார்க்க வைத்திருக்கும் மிக முக்கியமான எழுத்தாளர்.

இவரது படைப்புகள்
1.அளம்
2. மாணிக்கம்
3.கீதாரி
4.கற்றாழை
5.ஆறுகாட்டுதுறை
6.சாமுண்டி
7.கண்ணகி

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்










த.பழமலய்

தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படும்பொழுது அதிலே கவிஞர் த.பழமலய்க்கும் நிச்சயமான ஓர் இடம் உண்டு.
கவிஞர் பழமலாய் மக்கள் இயக்கத்திலே இணைந்து மனித நேசிப்பினை உள்வாங்கிக் கொண்டார். கிராமிய மண்ணிலே வேர் கொண்ட எளிமையை ஆட்சிப்படுத்தினார். சாதாரண மக்கள் வாழ்க்கையில் ஏற்படும், சட்டென்று கண்களுக்குப் புலனாகாத, சிறு சிறு சலனங்கள் கூட கவிதைகளுக்கான உயிர்ப் பொருளாகப் பழமலய் வசப்படுத்தினார்.

["எதுவும் பெரிய மசுரு இல்லை நிறைய எழுதுங்கடா"ன்னு எங்களுக்கு துணிச்சல் கொடுத்தவர், "சினிமா அப்ப ரொம்ப கஷ்டம் இப்ப எப்பிடி?" என்று தெரியாத மாதிரி கேட்பார், "அறிவுமதி, தங்கர்ல்லாம் இருக்காங்க இல்ல போங்க போங்க" என்று சொன்னவர்]

இவரின் படைப்புகள்
1.சனங்களின் கதை, 1996
2.குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், 1991
3.இவர்கள் வாழ்ந்தது, 1994
4.இன்றும் என்றும், 1998
5.முன் நிலவுக்காலம், 1999
6.புறநகர் வீடு, 2000
7.இரவுகள் அழகு, 2001
8.வேறு ஒரு சூரியன், 2002
9.அண்ணன் குப்புசாமி இன்னும் ஆழமானவர்-வாழ்க்கைக் குறிப்புகள், 1978
10.நரபலி:தெய்வங்கள்,திருவிழாக்கள், 2002
11.திருக்குறளார் வீ.முனிசாமி வாழ்வும் பணியும், 2003
12.பாம்புகள் சிறுகதைகள், 2003
13.தெரியாத உலகம், 2004
14.தருமபுரி(தகடூர் நாட்டுத் தகடூர்) மண்ணும் மக்களும், 2005

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்





அறிவுமதி,


புகழ் பெற்ற தமிழ் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. தனது நண்பர் ‘அறிவழகன்’ பெயரையும், தனது பெயரையும் சேர்த்து ‘அறிவுமதி’ என்று வைத்துக்கொண்டார்.
திரைப்படதுறையில் என்னை போல வாய்ப்பு தேடும் பலருக்கு வழிகாட்டி.........
இன்று நான் 10க்கும் மேற்ப்பட்ட திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்ததற்கு காரணமாக இருந்தவர்.,
இவரின் படைப்புகள்;
1.நிரந்தரமனிதர்கள்,
2.புல்லின் நுனியில் பனிதுளி ,
3.அனு திமிர் அடக்கு
4.என் அன்பான ராட்சசிக்கு,
5.ஆயுளின் அந்தி வரை
6.கடைசி மழைதுளி
7.நட்புகாலம்
8.வெள்ளைத்தீ
9.வலி

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்

கவிஞர் கரிகாலன்

எல்லோருக்கும் காணக்கிடைக்கும் சராசரிக் காட்சிகளிலிருந்துகூட கவிஞன் சில கண்டறிதல்களை அடைகிறான்.அந்த மாற்றுக் கோணத்தை, சிந்தனையை கற்பனையும், கவித்துவமும் கலந்து தருகிறான். கவிஞர் கரிகாலன் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர். அதிகாரத்தின் முன் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம், வஞ்சிக்கப்படும் எளிய மனிதர்களுக்கான அக்கறை, அரசியல், காமம், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகடி, அலாதியான கற்பனை, காட்சிகளை முன்வைத்துவிட்டு ஒதுங்கி நின்றுகொள்ளுதல், தொன்மையையும் நவீனத்தையும் இணைத்து ஒரு மாயக்காலத்தை உருவாக்குதல் , சிதையும் தொன்மம் பற்றிய கவலை, குழந்தைகள் உலகம் என இவரின் கவிதைகளின் தன்மைகள் பலதரப்பட்டது. 90 களுக்குப் பின் நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள் என்கிற இவரின் திறனாய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல் இவரின், திறனாய்வு ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும் சிறந்தவொரு நூல்.கவிதைகளோடு நின்றுவிடாமல் திறனாய்வு, கட்டுரைகள், நாவல் எழுதுவது, சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபாடு என இயங்குகிறார்.மேலும் களம் புதிது என்கிற சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் இதழைத் தொடர இருப்பதாக அறிய நேர்ந்தது. தொன்னூறுகளிலிருந்து இலக்கியவெளியில் இயங்கிவரும் கரிகாலன் 1965ல் கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்தவர்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணுபுரிகிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.புனைவிலக்கியத்திற்காக கதா விருதும், கவிதைக்காக ஏலாதி இலக்கிய விருதும் பெற்றுள்ளார். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முன்னணிப் புதின எழுத்தாளர்களுள் ஒருவர்.இவரது தம்பி இரத்தின.புகழேந்தி அவர்களும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் எனும் 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது. அதன் பின்னைட்டையில் காணப்படும் வரிகளே, இவரைப் பற்றின செறிவான, ஆழ்ந்த திறனாய்வுக்கு சான்றாக அமைந்துள்ளது. அது பின்வருமாறு ‘ தொன்னுறுகளில் உருவான தனித்துவம் மிக்க கவி ஆளுமைகளுள் ஒருவரான கரிகாலனின் கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை.தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை.ஐவகை நில அடையாளங்கள் திரிந்து உருவாகிக்கொண்டிருக்கும் ஆறாவது நிலத்தையும், அபத்தங்களின் கூட்டிசையாக மலர்ந்திருக்கும் நம் நலவாழ்வையும் கேலிசெய்யும் இத்தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள அவரது தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது


' இவரின் படைப்புகளாவன'

1.புகைப்படமனிதர்கள்
2.அப்போதிருந்த இடைவெளியில்- கவிதைகள்
3.புலன்வேட்டை- கவிதைகள்
4.தேவதூதர்களின் காலடிச்சத்தம்- கவிதைகள்
5.இழப்பில் அறிவது- கவிதைகள்
6.ஆறாவது நிலம்- கவிதைகள்
7.அபத்தங்களின் சிம்பொனி- கவிதைகள்
8.கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
9.நவீனத்தமிழ்க் கவிதையின் போக்குகள்- கவிதைத் திறனாய்வுக் கட்டுரைகள்
10. நிலாவை வரைபவன் - நாவல்

நன்றி; தடாகம், ச.முத்துவேல்

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்


















கண்மணிகுணசேகரன்


முதல் பிரசுரம்
ஒவ்வொரு வெளியீடும் முதல் பிரசுரம் கண்மணி குணசேகரன்
படையை ஆட்சி செய்த பெருஞ்சமூகம் என தெருக்கூத்து பாடல்களில் பிளந்து கட்டினாலும், முட்டிவரை நீண்டு தொங்கும் அவரின் ஒட்டுக்கோவணம் போலவே நெட்டெழுத்துக்களால் ஆனது, அப்பாவின் கையெழுத்து. கையை ஊன்றி கரணம் போடும் எங்களது குடும்பத்தில் நானும் என் அண்ணனும் மட்டுமே முதல் தலைமுறை படிப்பாளிகள். எழுத்து, இலக்கியம் என்கிற வகையில் பங்காளி, ஒறம்பரை, தாய்மாமன் என எட்டின வரைக்குமான எங்களின் நெடிய வகையறாக்களில் நான் மட்டும் முதல் படைப்பாளி. செம்மண்ணில் கால் பாய்ச்சி, கிளை நீட்டி விரிந்திருக்கும் இந்த முந்திரிக்காட்டு இலக்கியத்தில் தங்கர்பச்சானை அடுத்து வந்தவனும் நான்தான்.அது 87ஆம் ஆண்டு. சாலையோர நொச்சிச் செடியை பார்த்து நான் எழுதிய கவிதை போன்ற ஒன்றை உளுந்தூர்பேட்டை ஐடிஐ சக பயிற்சியாளர்களால் ‘இதாண்டா கவிதை’ என பாராட்டிய போதே எனக்கு பெரும் கவிஞனாய் ஆகிவிட்ட பூரிப்பு. (ஆனால் அது எந்த இதழிலும் பிரசுரம் ஆகவில்லை). பிறகு கடலூரில் இருந்து வந்த “காகிதம்’’ என்ற சிற்றிதழில் எனது கவிதை முதன்முதலாய் அச்சில் வந்தது. ஆனால் கவிதைக்கும் கீழேயும், மேலேயும் என்பெயர் வரவில்லை. விட்டுவிட்டார்கள். ‘கண்மணிகுணசேகரன்’ என்கிற என் பெயரை கட்டாயம் அச்சில் பார்த்து விட வேண்டும் என்கிற அவலாசையை பூர்த்தி செய்தது ஒரு வார இதழில் வெளிவந்த அதிரடி கவிதைதான். ஆனால் அதை படித்த எனக்கு பெரும்பரபரப்போ, பெருமையோ ஏற்படவில்லை. எனக்குத் தெரிந்த இலக்கியர்கள் யாரும் அந்த இதழை படிக்கவில்லை. மீறி படித்திருந்தாலும் என் கவிதையை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற தெரிந்த இலக்கியர்கள் யாரும் அந்த இதழை படிக்கவில்லை. மீறி படித்திருந்தாலும் என் கவிதையை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற மாதிரி பெரிய கவிதையில்லை. சிட்டு முட்டை இட்ட மாதிரி துணுக்கு துணுக்கான சின்ன வரிகள். கண்ணில் தென்படாமல்கூட போய்விடும்.அய்யா பழமலய் அவர்களின் தொடர்பால், தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருந்த கவிதைகளை கேட்டு, கவிதைகளை வாங்கி அவரின் சிறு அறிமுகத்துடன் ‘அரங்கேற்றம்’ என்னும் இதழில் போட வைத்தார். பழமலய் அவர்களின் கரிசனத்தோடு கூடிய கவிதை என்பதால் கவனம் பெற்று, பலரும் பார்த்ததாய் சொன்னார்கள். முதன்முதலில் எனது கவிதை மற்றவர்களின் பார்வையில் பட்டு பிரசுரம் என்கிற தகுதியை பெற்றது, அரங்கேற்றம் இதழில்தான். அதிலும் ஒரு சிக்கல். பலரும் பார்த்ததாய் சொன்னார்களே தவிர அந்த இதழ் வெகுகாலம் வரை என் கண்ணில் கிடைக்காமல் போய், நிறைய கவிதைகள் எழுதியபின் பிற்காலத்தில் பார்க்கக் கிடைத்தது. கவிதையில் கொஞ்சம் கூடுதலாய் பழமலய் கை வைத்திருந்தார். ஆனாலும் தொடர்ச்சியான என் கவிதைகள் அவரின் மூலமாகவே (என் வேண்டுதலுக்கிணங்க) கவிதாசரண், நிகழ் போன்ற இதழ்களில் வெளியாயின. “இன்னும் என்னா கண்மணிகுணசேகரன் கவித பழமலய் உறையிலேயே வருது. நேரடியா அனுப்பலாமே’’ என உள்ளூர் இலக்கியவாதியிடம் கவிதாசரண் சொன்னதான சேதி அறிந்தேன்.எனது தலைமுறைக் கோபம் கவிதை தொகுப்பிற்கு பிறகு கதைகள் மேல் நாட்டம் ஓடியது எனக்கு. மண் சார்ந்த வாழ்வியலை மண்ணின் மொழியிலேயே எழுத வேண்டும் என்கிற பேராவல். உட்கார்ந்து சரசரவென ‘சருகு’ என்கிற ஒரு கதையை எழுதினேன். எங்கள் மணக்கொல்லையில் வாழ்கிற கலியன் என்பவர், வெற்றிலை சருகிற்காக படும் அவலத்தை சொல்கிற கதை அது.அழகாக கார்பன் வைத்து எழுதி படியை இறுத்திக் கொண்டு தெளிவான கையெழுத்துப் பிரதியை, கோவை புலமைப் பண்ணை வெளியிடும் தாராமதி இதழுக்கு அனுப்பி வைத்தேன். சிற்றதழில் ஆறேழு பக்கம் கொண்ட கதையை வெளியிடுவார்களா என்கிற பயத்தோடுதான் அனுப்பினேன். எனக்கு ஒரே ஆச்சரியம். அடுத்த இதழிலேயே கதை வந்திருந்தது. குட்டி குட்டி கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு, தொடர்ச்சியான ஐந்தாறு பக்க என் படைப்பைப் பார்த்த எனக்கு கைகால் புரியவில்லை. ஆனால் ஊனாடி படித்து பார்த்த நான் சப்பிட்டுப் போய்விட்டேன். எனது முந்திரிக் காட்டு வட்டார வழக்கில் இருந்த பல சொற்களை, தொடர்களை அப்படியே கோவை வட்டார சொல் வழக்காக அய்யா குன்றம் அவர்கள் மாற்றியிருந்தார். (என்னா நமக்கு தெரியாத பெரிய இந்த எழுத்த எழுதறானுவோ போடு கத்திய). இப்படித்தான் என் முதல் கதை பிரசுரமும் நிகழ்ந்தது.ஒரு படைப்பாளிக்கு ஒவ்வொரு படைப்பும் ஒரு பிரசவம் மாதிரியென்பார்கள். இதை வெறும் சொல்லாக கொள்ளாமல் கவிதை, கதை, நாவல் மற்றும் நடுநாட்டுச் சொல்லகராதியென இந்த பதினைந்து ஆண்டுகால படைப்பு பாணியில், ஒவ்வொரு வெளியீட்டின் போதும், ஒரு முதல் பிரசுரம் போலவே கண்டு பேருவுவகை கொள்கிறேன்.

நன்றி;கீற்று


இவரின் படைப்புகள்;
1.தலைமுறைகோபம்,
2.உய்ரிதண்ணீர்
3.அஞ்சலை
4.ஆதண்டார் கோயில் குதிரை
5.கோரை
6.பூரணி பொற்கலை
7.நெடுஞ்சாலை