
GAMES SETUP"S
பங்குனி உத்திரத்திற்கு
நீயும் வருவாய் என
வந்திருந்தேன்.
செல்லியம்மன் சிரிப்பை ஒத்த
உன் கன்னக்க்குழி சிரிப்பை
மறக்க செய்தது நாட்கள்.
மழை நாட்களில் மேய்த்த
ஆடு மாடுகள் அற்ற ஊர்
ஊராக இல்லை.
பச்சை மல்லாட்டை
சுட்டு தின்கிற
ஆட்டுக்காரப்பிள்ளைகளை
காணவில்லை.
ஓடி ஒளியிராட்டம்,
உப்பாள் சரணா,
விளையாட
யாருக்கும் தெரியவில்லை.
திருப்பூருக்கும்,சென்னைக்கும்
வேலைக்கு போய்விட்ட
பசங்க பிள்ளைங்க எல்லாம்
விருந்தாளியா
விடுமுறைக்கு
வந்து இருக்கிறார்கள்.
எல்லார் கையிலும்
செல்போன் இருக்கிறது -
அதில் இருக்கிற
GAMES SETUP - ல்
கிரிக்கெட்-கேரம்போர்டு
ஆடத்தெரியுமா என கேட்டு
சொல்லிக்கொடுத்தது உன் மகள் - அதே
செல்லியம்மன் சிரிப்பை ஒத்த
சிரிப்போடு...
வீரமணி