Wednesday, June 07, 2006

கறுப்புப்பெட்டி

இரட்டை அர்த்ததில்
பேசும் போது
புரிந்து கொண்டாலும்
எதுவும் நிகழாதது போல
பேசிக் கொண்டிருப்பாய்

பார்வையை
சரியாக கணித்துக் கொண்டு
மிக இயல்பாய்
சரி செய்துகொள்வாய்
மேல் தாவணியை

முகம் பார்த்து பேசுகையில்
என் பார்வை தடுமாற்றத்தை
பத்திரப்படுத்திக் கொள்ளும்
உன் கறுப்புப் பெட்டியை
உடைத்துப் பார்க்க வேண்டும்

என்னிடமிருந்து
எதை எதையெல்லாம்
சேமித்து
வைத்திருக்கிறாயென.

Thursday, June 01, 2006

சந்திப்புகள்

சந்தோஷம் தொலைத்த
பொழுதொன்றில்
புறப்படுவேன் உன்னிடம்...

தனிமைகளற்ற நெருக்கடியில்
குலுங்கித் தவிக்கின்றன
உன் வளையல் கரங்கள்

ஒதுங்கி சைகைகளில்
தனிமைப்படுத்துவாய்
சாமி அறைக்குள்

குறுக்கிட்டு அழைக்கும்
யாருடையதோ -
கொலுசுச்சத்தம்

போகட்டுமென அவசரத்தில்
பகிர்ந்து கொண்ட
முத்தத்தின் சுவை
ஞாபகத்தில் இல்லை

உனக்கெப்படியென
கேட்க்கமுடியாது
புறப்படும் அவசியம்
நேருமெனக்கு

உள்ளங்கை அழுந்த
அழுத்திக்கொள்ளும்
மிச்சத்தில்
வாழ்ந்துகொள்வேன்
மறுபடியும் உன்னை
சந்திக்கும்வரை.

Saturday, May 27, 2006

தாத்தாவின் கவிதை

அண்ட வெட்டிகினு இருந்தவன
நாலஞ்சுபேரா வந்து

"யோவ் தாத்தா வந்து
ஓட்டு போட்டுட்டு வந்துறு"-ன்னு
கூப்டதுக்காக

கட்டுன கோவணத்தோட ஓடியாந்து
ஓட்டுப் போட்டு
இவனுவள சட்டசபைக்கு அனுப்பி
எங்களுக்கு ஏதாச்சும் செய்யுங்கடான்னா...

மசுருப்புடுங்கியானுவோ
மைக்கப் புடுங்கி அடிச்சிகிட்டு
சட்டசபைல கபடி விளையாடுறானுவ!

Friday, May 26, 2006

கொட்டாங்குச்சி மார்பகம்

பறை அதிர
உயிர் அதிரும்
சாவு வீட்டில்

ஊத்திக்கொண்ட போதைக்கு
அடிபட்டு கிழியும்
பறை மேளமும்
சட்டி மேளமும்

மாருக்கு வலிக்காது
மார் அடிக்கும்
மருமகள்களின் ஒப்பாரிகளில்
சுதி ஏதும் இருப்பதில்லை

தப்பு மேளக்காரனை
"என்னா அடி அடிக்கிறீங்க...
விளாசுங்கடா"
என வீராப்பாய் பேசி
பறைசாற்ற வேண்டும்
பங்காளி என்பதை நிரூபிக்க

யாருக்கும் தெரியாமல்
பொம்பளை வேசங்கட்டிய
உரிமை செட்டுக்காரனின்
கொட்டாங்குச்சி
மார்பு குலுக்கலை
ஏக்கத்தோடு பார்த்திருக்கலாம்
என்னைப்போலவே
துக்கம் விசாரிக்க வந்த
வேறுசிலரும்.

Wednesday, May 24, 2006

ஓடி விளையாடு காதலே 3

காதலை
பகிர்ந்துகொள்ள
கோயிலுக்கு சென்றோம்,
காமத்தை
பகிர்ந்து கொடுத்தது
கோயில் சிற்பங்கள்.

ஓடி விளையாடு காதலே 2

சதை கிழித்து
ரத்தம் கொட்டி
பெரிய சிராய்ப்புகள்
ஏதுமின்றி
அதனளவு வலியை
தரவல்லது -
ஆணுக்கு பெண்ணுடையுதும்
பெண்ணுக்கு ஆணுடையதுமான
மிக அந்தரங்கமான
பார்வைகள்.

ஓடி விளையாடு காதலே 1

கட்டுக்கடங்காத உன்
பார்வை மழை
என் காதல் ஏரியை
உடைத்துப்போட்டுவிட்டது...
நீதான் கொடுக்கவேண்டும்
முத்த
நிவாரண நிதி!