Tuesday, April 08, 2008

கவிதை

தொலைத்து, தொலைந்து
கொண்டு இருக்கிறோம்..









நகர எல்லை கடந்து
காணிக்கல் பலகையில்
பெரியார் நகர்,
அவ்வைநகர் என
பெயர் தாங்கி
நகர் மயமாகிறது கிராமங்கள்.

வீட்டுக்கு வீடு இருந்த
கட்டுத்தெருக்களையும்
ப்ளாட் போட்டுவிட்டு
வண்டிக்கடைகளில்
பீஃப் பிரியாணி
சாப்பிடுகிறோம்,

காற்றொலிப்பானில்
சத்தமெழுப்பி
குழந்தைகளை கூப்பிடும்
அய்ஸ் வண்டிகாரர்கள்
வருவதில்லை,
குழந்தைகளை
அழைத்துகொண்டு
பேக்கரிகளுக்கு செல்கிறோம்
வெனிலாக்களை சாப்பிடுவதற்கு,

"ஒரு படி நெல்லுக்கு
மூனு படி உப்பே....."
எனற ராககுரல்கள்
கேட்பதில்லை ஊருக்குள்,
தூள் உப்பாக
மளிகை பட்டியலோடு
வந்துவிடுகிறது.




சட்டிபானை,
அம்மி,கொடக்கள்ளு
ஏற்றி வரும்
கட்டைவண்டிகள்
வருவதில்லை ஊருக்குள்.




மிக்சி,கிரைண்டர்களை
ஏற்றிகொண்டு வருகிறது
மூன்று சக்கர வாகனங்கள்,

கெடா மீசை ,கொடுவாகத்தியோடு
ஊர் எல்லையில் நின்று இருந்த
வீரன், அய்யனாரெல்லாம்
காணாமல் போக
வீதிக்கு வீதி கொழுக்கட்டைகளை
சாப்பிட்டுகொண்டிருக்கிறார்கள்
பிள்ளையார்கள்.

வீட்டு தோட்டத்தில்,
வயல் வரப்புகளில்
விளைந்ததை ,

பழைய இரும்பு தகரத்துக்கு
எடைக்கு எடை
வெங்காயம், தக்காளி என
கூவி விற்றதை,

முனை கிள்ளிப்பார்த்து,
நிமிண்டிப்பார்த்து,
முறுக்கிப்பார்த்து,
வாங்கியதையெல்லாம்
மறந்த்துவிட்டு

குளிர்சாதன
அறைகளின் அடுக்குகளில்
அடுக்கியிருக்கும்

பதபடுத்திய "பழசு" களை
"பிரஷ்ஷாக"
வாங்கிகொண்டிருக்கிறோம்
ரிலயன்ஸ் ஃபிரஷ்களில்
. .

3 comments:

Anonymous said...

அன்பு நண்பர் வீரமணிக்கு,
கான்கிரீட் காடுகளில் நாம் வாழத்தொடங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது.கிராமங்களில் விளைந்ததை கிராம மக்களே பண்டமாற்று முறையில் உண்ட போது வளமையில் திளைத்தவர்கள், இப்பொழுது யூரியா மூட்டைக்கும்,இங்கிலீஸ் மருந்துக்கும் காசை கொடுத்து விட்டு,வறுமையின் காரணமாய் நிலங்களை விற்று பிழைக்கும் நிலைமைக்கு வந்து விட்டார்கள் .நம்முடைய இத்தகைய நிலைமைக்கு யார் காரணம் என்று அறிந்தாலும் ...,அறியாமையும் கூட கைக்கோர்த்துக்கொண்டு....அலைகிறது என்ன செய்வது??? எது எப்படியோ கவிதையில் உண்மை இருந்தது.ஆங்கில வார்த்தை இல்லாமல் இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

சுகவி said...

கிராமங்களின் தற்போதைய நிலைமையை அப்படியே கவிதையாக்கியுள்ளீர்கள்.
அருமை.

சுகவி said...

கிராமங்களின் தற்போதைய நிலைமையை அப்படியே கவிதையாக்கியுள்ளீர்கள்.
அருமை.