Wednesday, December 24, 2008

சுப.வீ



மேடைத்துளிகள் (2008 செப்டம்பரில் சுபவீரபாண்டியன் பல்வேறு ஊர்களில் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய உரைகள்)அண்ணல் அம்பேத்கர் பார்வையில்...

உலகம் எப்படித் தோன்றியது, மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பது குறித்து எல்லா மதங்களும் பேசுகின்றன. குறிப்பாக, கிறித்துவ மதம் கூறும் கருத்தை இஸ்லாம் உட்படப் பல மதங்கள் ஏற்கின்றன. கடவுள் முதலில் ஆதாம் என்கின்ற ஆணைப் படைத்தார், பிறகு அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாள் என்கின்ற பெண்ணைப் படைத்தார் என்பதே மதங்களின் பார்வை. படைப்புக் கொள்கைக்கு மாறான, பரிணாமக் கொள்கையை எந்த மதமும் எடுத்துரைக்கவில்லை. எடுத்துரைக்கவும் முடியாது. எனினும், முதல் ஆணையும், முதல் பெண்ணையும் கடவுள் படைத்தார் என்றுதான் மதங்கள் கூறுகின்றன. ஆனால், உலகிலேயே, நால்வருணங்களாக மனிதர்களைக் கடவுள் படைத்தார் என்று இந்துமதம் மட்டுமே கூறுகின்றது.இது குறித்த ஆழ்ந்த ஆய்வினை அண்ணல் அம்பேத்கர் நிகழ்த்தியுள்ளார். ரிக் வேதத்தின் 10 ஆவது இயலான புருஷசூக்தத்தில் கடவுளின் நெற்றி, தோள், இடை, பாதம் ஆகியனவற்றிலிருந்து பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர வருணங்கள் தோன்றியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது ‘இடைச்செருகல்’ என்பது அம்பேத்கரின் கருத்து. இருப்பினும், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வருணம் வருணமாகப் படைக்கப்பட்டனர் என்னும் இந்துமதக் கருத்தியல்தான், இன்றைய சக ஏற்றத்தாழ்வுகளின் அடித்தளம் என்பதை அவர் நிறுவியுள்ளார். இந்த ஏற்றத்தாழ்வை நிறுவுவதே பகவத்கீதையின் நோக்கம் என்பதையும் அவர் ஆதாரங்களுடன் காட்டியுள்ளார்.எனவே, உலகெங்கும் உள்ள ‘தொழில் பிரிவு’, இந்தியாவில் மட்டும் ‘தொழிலாளர் பிரிவு’ என ஆக்கப்பட்டது. அதுவும், வெறும் பிரிவாக அல்லாமல், ஒருவரின் கீழ் ஒருவர் என்னும் வகையில் அடுக்காக ஆக்கப்பட்டது. அந்த அடுக்கு எவ்வாறு இருந்ததெனில், ‘படிப்படியான சமநிலை அற்றதாக’ இருந்தது என்பார் அம்பேத்கர்.தனி மனிதனைப் படைக்காமல், வருணங்களைப் படைத்த கடவுள் (“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்”-பகவத்கீதை ), ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு தொழில் உரியது என்றும் ‘விதித்துவிட்டார்’ என்பதே இந்துமதத் தத்துவம். நான்கு வருணங்கள், நாலாயிரம் சாதிகள் ஆயின. பிறகு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் என்றாயிற்று. இன்று வழக்குரைஞர்களாக உள்ள நாங்கள் எல்லோரும் ஒரே சாதியினர் இல்லையே என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். சாதிக்கும், தொழிலுக்குமான பிணைப்பு, நூற்றாண்டுகள் போராடிய பின்பு, இன்று அறுபட்டுள்ளது. அதுவும் கூட, இடைநிலையில் மட்டும்தான் அறுபட்டுள்ளது. மேலும், கீழும் நிலை மாறவில்லை.கோயில் அர்ச்சகர்களாக, புரோகிதர்களாகப் பார்ப்பனர்களே உள்ளனர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் புரட்சித்திட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுபோன்றே, பிணம் எரித்தல், பறை அடித்தல், மலம் அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் ஆகிய தொழில்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன. சாதியும், தொழிலும் அங்கே அறுபடவில்லை. இப்பிணைப்பின் காரணமாக, சாதி அடிப்படையிலேயே தொழில்களுக்கான முதலீடுகள் செய்யப்பட்டன. இன்றும், கிராமங்களில் உற்பத்தி ஒழுங்கு முறையில் சாதி ரீதியான முதலீடுகளே உள்ளன. அவை, வர்க்கப் போராட்டத்திற்கு வழிவிடாத தடைச்சுவர்களாக உள்ளன.தொழிலாளி என்பவன் தொழிலாளியாக மட்டுமில்லாமல், சாதியப் பாகுபாடுகளுக்கு உரியவனாகவும் இருக்கிறான். அதனால்தான், தொழில் வளர்ச்சி பெற்ற இடங்களிலும் கூட, சாதியின் ஆதிக்கம் குறையாமலே இருக்கிறது. ஆகவே, வருண-சாதி அமைப்பை அழித்து ஒழிக்கப் பாடுபடுவதே இன்றைய முதல் தேவையாக உள்ளது.(23.09.08 - கோவை, வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரையிலிருந்து)சலியாத மனமே அழியாத சொத்து‘கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை’ என்று கவிஞர் சுரதா கூறியதுபோல, இன்றும் அதிகாலை எழுந்து நள்ளிரவு வரை உழைக்கின்ற தலைவர் கலைஞரின் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நான்கு கூறுகள் குறித்து இதுவரை கூறினேன். கூர்த்த மதி, கூடுதலான உழைப்பு, நெஞ்சு உரம், நிருவாகத் திறன் எனப்படும் அந்நான்கு கூறுகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளையும் நாம் பார்த்தோம். ஆனால் அவற்றையும் தாண்டி இன்னும் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாய்ப் படுகின்றது.‘சலிப்படைவது’ என்னும் குணம், எந்த ஒரு மனிதனுக்கும் இயல்பானது. சலிக்கும் கால அளவு, ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனாலும் எதன் மீதும் நமக்குச் சலிப்பு வந்தே தீரும். நமக்கு மட்டுமல்ல, மாபெரும் தலைவர்களுக்கும், போர் வீரர்களுக்கும் கூடச் சில நேரங்களில் சலிப்பு வந்து விடும். எண்பதுக்கும் மேற்பட்ட போர்க்களங்களைக் கண்ட நெப்போலியனுக்குக் கூட, ஒரு கட்டத்தில் போர் சலித்தது. செயின்ட் ஹெலினா தீவிலிருந்து (சிறை) தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அந்தச் சலிப்பை நாம் பார்க்க முடிகிறது.அரும்பெரும் தியாகங்களை எல்லாம் செய்து, நாட்டின் விடுதலைக்காய்த் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அரிய தலைவர் வ.உ.சி.க்குக் கூட, இறுதி நாள்களில் அரசியல் சலித்தது, இலக்கியம் நோக்கிச் சென்றார். சிறுகதை மன்னன் என்று அறியப்படும் ஜெயகாந்தன் அண்மையில் எழுதிய சிறுகதை எதையும் காண முடியவில்லை. ஜெயகாந்தனுக்குச் சிறுகதை சலித்திருக்கலாம். ஆனால், 85 வயதான பின்னும், அரசியல் சலிக்கவில்லை, இலக்கியம் சலிக்கவில்லை, சமூகச் சிந்தனை சலிக்கவில்லை. இப்படி ஒரு மனிதர் நம்மிடையே உண்டென்றால், அவர் கலைஞர்தான்.இயல்பாகக் குழந்தைகள்தான் எதிலும் சலிப்படையாமல் இருப்பார்கள். ஒரே விளையாட்டைப் பலமுறை திருப்பித் திருப்பி விளையாடுவார்கள். சலிக்காது. வயது ஏற ஏற, சலிப்படையும் மனமும் வளர்ச்சியடைகிறது. ஆனால் கலைஞரோ விதிவிலக்காக இருக்கிறார். அரசியலில் ஆயிரம் நெருக்கடிகள், நடக்கவே சிரமப்படும் உடல் என எல்லாச் சிக்கல்களுக்கு மிடையில், நாள்தோறும் அவர் எழுத்திலும், பேச்சிலும் காணப்படும் நக்கல், கேலி நையாண்டிகள் எதைக் காட்டுகின்றன. சலியாத மனம் ஒன்று, அவரிடம் அழியாத சொத்தாக உள்ளது என்பதைத்தானே! அந்த மனம்தான் அவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்று நமக்குத் தோன்றுகிறது. அந்த குணம், அய்யா பெரியாரிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.(16.09.08 - சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து )பார்ப்பான் என்றால்...நாகர்கோயிலில், செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற பிராமணர் சங்க மாநாட்டில், கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் காலையில் நான் கூறிவரும் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். “அவன் ஒரு பேராசிரியனாம், என்ன தெரியும் அவனுக்கு? பார்ப்பான், பார்ப்பான் என்கிறானே, பார்ப்பான் என்றால் என்ன தெரியுமா?எதையும் சிந்தனை செய்து பார்ப்பான் என்று அர்த்தம்” (அடேயப்பா!) என்று பொருள் சொல்லியுள்ளனர். இன்னொருவர் பேசும்போது, அந்த ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ நிகழ்ச்சியை உடன் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் பெருமக்கள் பலர் என்னைப் பாராட்டியுள்ளனர். எனினும், அப்போதெல்லாம் ஏற்படாத மகிழ்ச்சி, இப்போதுதான் எனக்கு ஏற்பட்டுள்ளது.பிராமண சங்கம் இவ்வளவு கடுமையாய் எதிர்க்கிறது என்றால், நம் பணியை நாம் சரியாகச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதானே பொருள்!(27.09.08 - சென்னை, முகப்பேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்)இருக்கவே இருக்கிறார்கள் நம் இடதுசாரித் தோழர்கள்பெரியாரிடம், அண்ணாவிடமும் இருந்த அரசியல் இன்று விஜயகாந்திடமும், வடிவேலிடமும் வந்து சேர்ந்திருக்கிறது. நடிகர்கள் நாடாளக்கூடாது என்பதோ, அவர்கள் அரசியலுக்கே வரக்கூடாது என்பதோ நம் கருத்து அன்று. அது பிற்போக்குத்தனமானது. அனைவரும் அரசியல் தளத்திற்கு வரவேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் விஜயகாந்திற்கும், வடிவேலுவிற்கும் இடையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போட்டி அரசியல் தொடர்பானதா என்பதுதான் நம் கேள்வி. இவர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார், அவர் எதிர்க்கிறாரா அல்லது அவர் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்,இவர் மறுக்கிறாரா என்பதே நம் கேள்வி. இவர் காரின் கண்ணாடிக் கதவை அவர் உடைத்தார், அவர் வீட்டு சன்னலை இவர் உடைத்தார் என்பதெல்லாம் அரசியலாக முடியுமா? இதை வைத்து அவர்கள் அரசியல் நடத்துவதும், அதை இங்குள்ள ஊடகங்கள் எல்லாம் ஊதிப் பெருக்குவதும் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்யும்? போகிற போக்கைப் பார்த்தால், வடிவேலுவும் தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போலிருக்கிறது. அப்படி அவர் கட்சி தொடங்கினால் அவரை யார் ஆதரிப்பார்கள் என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. அவரோடும் கூட்டணி குறித்துப் பேச நம் இடதுசாரித் தோழர்கள் வராமலா போய்விடுவார்கள்! விஜயகாந்தின் வீட்டில் காத்திருந்த நம் தோழர் வரதராஜன், வடிவேலு வீட்டிற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க மாட்டாரா என்ன?(20.09.2008 அன்று திருப்பூரில், பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில். )விநாயகர் சதுர்த்திமத நம்பிக்கை என்பது வேறு. மத அரசியல், மத வன்முறை என்பன வேறு. பிள்ளையார் சதுர்த்தி என்று ஒரு விழா நெடுங்காலமாகத் தமிழ் மக்களின் வீடுகளில், வீட்டு விழாவாக நடைபெற்று வந்தது. அதுவே மெல்ல மெல்லத் தெருவுக்கு வந்து, இப்போது பல கலவரங்களுக்குக் காரணமாகியிருக்கிறது.
பிள்ளையார் பக்தி, பிள்ளையார் அரசியலாக உருவெடுத்து, பிள்ளையார் வன்முறைக்கு வழிவிட்டிருக்கிறது. இது தற்செயல் நிகழ்வு அன்று, திட்டமிட்ட சதி.இப்படித்தான் சேதுக் கால்வாய்த் திட்டத்திலும் இப்போதும் இந்துத்துவ குறுக்கீடு நேர்ந்துள்ளது. மத நம்பிக்கை சரியா, தவறா என்பது வேறு. ஆனால் அந்த நம்பிக்கை ஒரு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் குறுக்கிடுவதை முற்போக்குச் சிந்தனையாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வீட்டிலிருக்க முடியாது. அது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. உணர்ச்சியூட்டப்பட்ட காரணத்தால், ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்ட பொழுது, துள்ளிக்குதித்து எழுந்த நம் மக்கள், அடுத்த தலைமுறைக்கு அரும்பயன் தரக்கூடிய சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு இடையூறு நேர்ந்த நேரத்தில் வாய்மூடி இருந்தது ஏன்? அவர்களிடம் அந்தச் சிந்தனையை, விழிப்புணர்வை நாம் தானே உருவாக்க வேண்டும்.(3.10.2008 அன்று திருச்சியில் நடைபெற்ற மனித உரிமை உயிர்ப்பியக்கம் கூட்டத்தில்.
நன்றி
சுப.வீ]
கருஞ்சட்டைதமிழர்

No comments: