கவிஞர் கரிகாலன்
எல்லோருக்கும் காணக்கிடைக்கும் சராசரிக் காட்சிகளிலிருந்துகூட கவிஞன் சில கண்டறிதல்களை அடைகிறான்.அந்த மாற்றுக் கோணத்தை, சிந்தனையை கற்பனையும், கவித்துவமும் கலந்து தருகிறான். கவிஞர் கரிகாலன் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர். அதிகாரத்தின் முன் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம், வஞ்சிக்கப்படும் எளிய மனிதர்களுக்கான அக்கறை, அரசியல், காமம், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகடி, அலாதியான கற்பனை, காட்சிகளை முன்வைத்துவிட்டு ஒதுங்கி நின்றுகொள்ளுதல், தொன்மையையும் நவீனத்தையும் இணைத்து ஒரு மாயக்காலத்தை உருவாக்குதல் , சிதையும் தொன்மம் பற்றிய கவலை, குழந்தைகள் உலகம் என இவரின் கவிதைகளின் தன்மைகள் பலதரப்பட்டது. 90 களுக்குப் பின் நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள் என்கிற இவரின் திறனாய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல் இவரின், திறனாய்வு ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும் சிறந்தவொரு நூல்.கவிதைகளோடு நின்றுவிடாமல் திறனாய்வு, கட்டுரைகள், நாவல் எழுதுவது, சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபாடு என இயங்குகிறார்.மேலும் களம் புதிது என்கிற சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் இதழைத் தொடர இருப்பதாக அறிய நேர்ந்தது. தொன்னூறுகளிலிருந்து இலக்கியவெளியில் இயங்கிவரும் கரிகாலன் 1965ல் கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்தவர்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணுபுரிகிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.புனைவிலக்கியத்திற்காக கதா விருதும், கவிதைக்காக ஏலாதி இலக்கிய விருதும் பெற்றுள்ளார். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முன்னணிப் புதின எழுத்தாளர்களுள் ஒருவர்.இவரது தம்பி இரத்தின.புகழேந்தி அவர்களும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் எனும் 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது. அதன் பின்னைட்டையில் காணப்படும் வரிகளே, இவரைப் பற்றின செறிவான, ஆழ்ந்த திறனாய்வுக்கு சான்றாக அமைந்துள்ளது. அது பின்வருமாறு ‘ தொன்னுறுகளில் உருவான தனித்துவம் மிக்க கவி ஆளுமைகளுள் ஒருவரான கரிகாலனின் கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை.தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை.ஐவகை நில அடையாளங்கள் திரிந்து உருவாகிக்கொண்டிருக்கும் ஆறாவது நிலத்தையும், அபத்தங்களின் கூட்டிசையாக மலர்ந்திருக்கும் நம் நலவாழ்வையும் கேலிசெய்யும் இத்தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள அவரது தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது
' இவரின் படைப்புகளாவன'
1.புகைப்படமனிதர்கள்
2.அப்போதிருந்த இடைவெளியில்- கவிதைகள்
3.புலன்வேட்டை- கவிதைகள்
4.தேவதூதர்களின் காலடிச்சத்தம்- கவிதைகள்
5.இழப்பில் அறிவது- கவிதைகள்
6.ஆறாவது நிலம்- கவிதைகள்
7.அபத்தங்களின் சிம்பொனி- கவிதைகள்
8.கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
9.நவீனத்தமிழ்க் கவிதையின் போக்குகள்- கவிதைத் திறனாய்வுக் கட்டுரைகள்
10. நிலாவை வரைபவன் - நாவல்
நன்றி; தடாகம், ச.முத்துவேல்
No comments:
Post a Comment