Saturday, April 11, 2009

கம்பிகளை தாண்டி வீசும் காற்று


திமிங்கிலம்
ஆழ ஆழ
அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!

(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.

கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும். அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இனமானத்திற்கான கருத்தைப் பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே, பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர் விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம்.

புதுவையில் அண்ணன் சீமானைக் காண புறப்பட்டபோது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலைத் தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர், பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது.

தமிழ் பெரியவர் இறைக்குருவனார், இயக்குநர் அமீர் மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.நான் சிறை வெளிவாயிலில் இருந்த வாயிற்காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன். மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார்.

நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்டபோது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலைபேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில், என்னைப் பேசச் சொல்லி அலைபேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார்.

மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்.பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலை நீடித்தது. ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன. பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்துப் பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.

எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர். தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களைப் பெற்று என்னிடம் அளித்தார்.

தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.

சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

நானும், வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து, அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை.

இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வுவயப்பட்ட நிலையில் இருந்தேன்.அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும், வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களைத் தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானைப் பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம், எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும், வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்துப் பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம்.

ஆனால் நிபந்தனை..

புத்தகங்கள் கொடுக்க கூடாது. வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார்.என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்.... அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் .. இனத்திற்காக, இன அழிவினைக் கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனைப் பார்த்து விடுவோம். மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்... எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன.இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இரும்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது. உள்ளே மங்கலான வெளிச்சம். வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில்.. வாருங்கள் வழக்கறிஞர்களே... என்ற குரல்..தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ... என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ.. பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ.... மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ ... அதே குரல்...குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா. அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன. தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.அங்குதான்.. தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார். நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்... இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன்.

ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம்.. பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.ஒரு சிறைச்சாலையில்... சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ, அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ... இருக்க முடியவில்லை. மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து... எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப்பட்டு... மீறி எழும் இனமான உணர்வினையும்.. சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்... சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்... அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.என் புலன்கள் என்னையும் மீறி... ஆதிச்சுழியாய்.. சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன். அண்ணனும் கலங்கி.. நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.

அப்பா.. எப்படியிருக்கார்.. திமுககாரர் .. அவரிடம் வம்பு வளர்க்காத.. பாவம்டா அவரு..

என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்.. அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா... தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை, கலங்குவதை கவனித்துக் கொண்டும், பதிவு செய்துக் கொண்டும் இருந்தன... நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன். விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்னபோது அவரின் முகம் இறுகியது.சுற்றி நின்ற காவலர்களைப் பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னைப் பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள்... அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.. பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள். இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்கக்கூட எனக்கு அனுமதியில்லை. .ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான். எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர். அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்.. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்டபோது அவர்களிடம் பதிலில்லை.எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார். அந்த தாளை என்னிடம் அளித்து, கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார். நானும் அதை பெற்று மடித்த போது.. மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர். அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம். வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்கப் பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும், உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார். மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்.. நீங்கள் எங்களுக்கு வேண்டும்.. கொள்கையாய்.. வழிகாட்டியாய்.. ஆசானாய்.. உறவாய் என்றேன்.கண்டிப்பாக.. என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது.

காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர். மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்... ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?

விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்.... அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா?

இந்த நாட்டில் துரோகி கருணாவைப் பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்.பி. தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு.மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே... தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே.. காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே... ஏனய்யா.. .உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது.. அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..? அவனின் உண்மையும், தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது? அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?வண்டி கிளம்பியது. கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன். காற்று வேகமாக வீசியது.. அந்த காற்று.. .சிறை மதிற்சுவர்களை தாண்டியும் வீசும்.காற்றை கைது செய்ய முடியுமா என்ன?. -


மணி.செந்தில், கும்பகோணம் (advmsk1@gmail.com)

நன்றி :கீற்று

மணி-செந்தில்

1 comment:

高収入アルバイト said...

性欲を持て余し、欲求不満になっている女性を金銭の対価を得て、癒して差し上げるお仕事です。参加にあたり用紙、学歴等は一切問いません。高収入アルバイトに興味のある方はぜひどうぞ