Friday, September 02, 2011

எனது பள்ளிகூட ஆசிரியர் திரு. தெய்வசிகாமணி அவர்களின் கானல் காடு பற்றி....

கானல்காடு ஒரு புதிய நவீனம்

கானல்காடு
நாவல்
கோ.தெய்வசிகாமணி
நடவு வெளியீடு
269,காமராஜ் நகர்,

ஆலடி சாலை,

விருத்தாசலம், 606001

போன்; 9789635570

விலை ரூ.300/-தண்ணீரே ஓடாத, ஒரு ஆற்றின் குறுக்கே, மிகப்பெரிய நீண்ட பாலத்தையும், சாலையில் எப்போதும் புழுதியுமாக இருக்கும் விருத்தாச்சலம் என்ற ஒரு சிறிய நகரில் - அந்த ஊரின் பெரும்பான்மை மனிதர்களைப்போல கறுத்த தோல்நிறம் கொண்டு, மிக குள்ளமான நசுங்கிய தோற்றம் கொண்ட, கோ.தெய்வசிகாமணி, தமிழுக்கு, ஒரு புதுவகையான நவீனத்தை தந்திருக்கிறார்.

1884ல் பிறந்து 1924ல் படுகொலை செய்யப்பட்ட ஆறுமுக நாட்டார் என்ற ஒரு சாமான்ய மனிதனின் கதையை, அந்த மனிதன் வாழ்ந்து மறைந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறுமுகநாட்டார் சுற்றி அலைந்த ஆறு மாவட்டங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, பலமைல் தூரம் பயணித்து, பல நூறு முதியவர்களை, ஆறுமுக நாட்டாரின் மூன்று தலைமுறை வாரிசுகளை நேரில் சந்தித்து, அவரைப் பற்றி கேட்டறிந்து, அவற்றையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்து, அரசாங்க ஆவணங்களில் ஆறுமுக நாட்டாரைப் பற்றி காணக்கிடைத்த செய்திகளையும் ஒன்றினைத்து, செவி வழி செய்திகளையும், கிடைத்த ஆவணக்குறிப்புகளையும் வைத்து கானல்காடு என்ற பெயரில், அவரின் கதையை, அவர் வாழ்ந்த வாழ்க்கையை, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, மிக யதார்த்தமாக, இயல்பாக, நிகழ்ச்சிகளாக்கி, இரத்தமும் சதையுமாய், ஒரு நவீனத்தை உருவாக்கி தந்திருக்கிறார்.

தமிழுக்கு இது புதுசு.

நம்முடைய வரலாற்று நவீனங்கள், பல குப்பையானவை சிறுகை வடிவத்தில் கூட, தமிழில், உலகதரத்தோடு போட்டி போட முடிந்திருக்கிறது. ஆனால் நவீனம் என்ற இலக்கிய வகையில், நம்முடைய சாதனை, மிக உன்னதமானவை என்று நம்மால் சொல்லிக் கொள்ள முடியாது. இதற்கான காரணிகள் பலவாக இருக்கலாம்.

1879ல் எழுதப்பட்ட தமிழின் முதல் நவீனம் என்று சொல்லப்படுகிற பிரதாப முதலியார் சரித்திரம் முதலாக, கடந்த 120 ஆண்டுகளில் வெளிவந்த எத்தனை தமிழ் நவீனங்களை, நம்மால் இன்றைக்கும் கொண்டாட முடியும் என்று, இலக்கிய வாசகர்கள் அனைவரும், அவரவர் மனநிலைக்கேற்ப, வாசகத்தன்மைக்கேற்ப, ஒரு பட்டியல் போட்டுப் பார்த்தால், இதன் நிதர்சனம் நமக்கு தெரியவரும்.

சண்முக சுந்தரம் 1940களில், நவீனம் படைப்பதை ஒரு கலையாக மாற்ற முயற்சித்து, எழுதி நாகம்மாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தமிழில் வெளிவந்த, நவீனங்களை, பரிசீலனைக்கு உள்ளாக்கி, சிலவற்றை தெரிவு செய்ய நமக்கு வாய்ப்புண்டு. நவீனத்தைப் பொறுத்தவரை, தமிழின் இலக்கிய வரலாற்றில், கடந்த 120 ஆண்டுகளில், ஒரு பத்து நவீனத்தை நாம் தெரிந்தெடுத்தால், கானல்காடு அந்த பத்தில் ஒன்றாய் இருக்கும்.

1880களில் கடலூரை மையமாக கொண்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாக, தற்போது ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிற, அந்த நிலப்பகுதிகளில், 1924 வரை - ஒரு நாற்பதாண்டுகளில், - அந்தப் பகுதிகளில் வாழ்ந்த எல்லா இன மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்நிலைகள் பற்றியும், அவர்களுடைய அப்போதைய வாழ்க்கை மதிப்பீடுகளைப் பற்றியும், குரூரங்களைப் பற்றியும், நிலஉடமையும், சாதியமும் தோற்றுவித்த ஆண்டான் அடிமை வாழ்நிலை சிக்கல்களையும், கானல்காட்டில் விவரித்ததைப் போல, வேறு எங்கும், ஒரு கலைவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

அப்போது வாழ்ந்திருந்த அந்த மனதிர்களின் மனவோட்டத்தை, அதன் சிதறல்களை, இவ்வளவு சிறப்பாக உரையாடல் வடிவத்தில், கதை சொல்லும் வடிவத்தில், காட்சிகளாக்கியும் மிக நேர்த்தியான ஒரு நெசவு சாத்தியமா என்று திகைப்பாயிருக்கிறது. பேராசிரியர் பழமலை, ஒரு வாய்ப்பேச்சில் குறிப்பிட்டதைப்போல, இனி ஆறுமுக நாட்டாரின் வரலாறென்றால், அது கானல் காட்டில் தெய்வசிகாமணி எழுதிய வரலாறுதான், என்ற முடிவுக்கு நம்மை நகர்த்தும் புதினம் இது. பாஸ்கரன் எளிமையாகவும் ஆழமாகவும் குறிப்பிட்ட மாதிரி, "ஆங்கிலேயன் ஆறுமுக நாட்டாரை, சிறை வைத்தான். கோ.தெய்வசிகாமணி, 80 ஆண்டுகள் கழித்து, கானல் காட்டின் மூலமாக ஆறுமுக நாட்டாரை விடுவித்திருக்கிறார்.

ஆங்கிலேயன் அவரை படுகொலை செய்தான்,
கோ.தெய்வசிகாமணி, கானல்காடு நவீனம் மூலமாக,
ஆறுமுக நாட்டாரை உயிர்ப்பித்திருக்கிறார்.''
என்ற அளவோடு, இந்த நவீனத்தின் சிறப்பு முடிவதில்லை.

செம்மொழி ராமசாமி, இந்த நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல, இந்த புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வழக்காற்று சொற்கள், இதுவரை எந்த அகராதியிலும் இடம் பெறாதவை.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் பிறந்து, ஆறுமுக நாட்டார் படுகொலை செய்யப்பட்ட அதே 1924ம் ஆண்டு மறைந்த ஜெர்மானிய எழுத்தாளன் காஃப்காவின் "விசாரணை'' என்ற புதினத்தின், நினைவுகளை கானல்காடு எனக்குள் தோற்றுவித்தது என்று தமிழ்நாடன் குறிப்பிடுகிறார்.


இந்த புதினத்தில் சொல்லப்படுகிற, உணவு வகைகள், பழக்கவழக்கங்கள் கலாச்சார பிண்ணனி ஆகிய பலவற்றை, ஒரு புனைதலில் தெய்வசிகாமணி புணர்நிர்மானம் செய்திருக்கும் செய்நேர்த்தி இன்னுமொரு அழகு.

உலக புதின வரலாற்றில், சரித்திரத்தை இலக்கியமாக்குகிற செய்நேர்த்தியின் உச்சம், நார்வே நாட்டைச் சேர்ந்த ஸீக்ரிட் யூண்ட்ùஸட் என்ற நாவலாசிரியையிடம் அபரிமிதமாக இருந்தது. 1929ல் அந்த நாவலசிரியைக்கு நோபல்பரிசு கொடுத்த போது, அந்த நவீனத்தை படித்த, வாசகர்களுக்கும் விமரிச்சர்களுக்கு இது குறித்து ஒருமித்த அபிப்பிராயம் இருந்தது.


வரலாற்றை புதினமாக்குகிற போது, அந்த புதினத்தின் வாசிப்பு ஈர்ப்புத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்வது. புதினத்தில் ஒரு சவாலான தன்மை கொண்டது. அதை கானல் காட்டின் ஆசிரியர், தன்னுடைய லாகவமான ஆற்றொழுக்கான நடையின் மூலமாக, சாத்தியமாக்கியிருக்கிறார் என்று சொல்லலாம்.


கதைத்தலைவன் சென்ற நூற்றாண்டில் உயிரோடும் உணர்வோடும் இந்த மண்ணில் உலவிய ஒரு மனிதர். அவரின் பலங்களையும், பலவீனங்களையும், ஒரு சார்பின்றி, துல்லியமாக பதியவைக்கிற முயற்சியில் ஆசிரியருக்கு வெற்றிதான்.

கதைத்தலைவன், ஒரு ஒளிவட்டத்திற்குள் அடைக்கிற முயற்சியில் இவர் ஈடுபடவில்லை. அதையும் மீறி, தலைமறைவு வாழ்க்கையில், ஓடி, ஓடி, பதுங்கி, பதுங்கி வாழ்ந்த இந்த மனிதனை நமக்கு நேசிக்க தோன்றுகிறது. சாதிவித்தியாசம் பாராமல், அந்த தலைமறைவு வாழ்க்கையில், எல்லா சாதியினரும் ஆறுமுக நாட்டாருக்கு உதவுவதும், ஆறுமுக நாட்டாரும் மனிதநேய விகசிப்போடு எல்லோருக்கும் உதவியாய் இருப்பதும், மிக இயல்பாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சாதிக்காரணை சாதிக்காரனே காட்டிக் கொடுக்கும் தொடர் வரலாற்றுப் பிழையில், ஆறுமுகநாட்டாரும் சிக்கிக் கொள்வது, எந்த காலத்திலும் மாறாத வரலாற்று போக்கை நமக்கு உணர்த்துகிறது.

இந்த நூலின் அறிமுக விழாவில், கொடுக்கூர் ஆறுமுக நாட்டாரை போற்றும் வகையில் உணர்வு பொங்க கொடுக்கூரிலிருந்து சென்னை பெருநகரத்திற்கு பேருந்து பிடித்து வந்து, கோயில் பூசாரி முதல் பஞ்சாயத்து தலைவர் வரை, திரளாக கலந்து கொண்ட அந்த கொடுக்கூர் கிராமத்து மக்களைப் பார்க்கிற போது, ஆறுமுக நாட்டார், 80 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அவர்கள் மனதில் எத்தனை ஆழமாக உணர்வு பூர்வமாக கலந்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நேரிலேயே பார்க்க முடிந்தது.

இந்த புதினத்தில் அடிவானம் கூட செம்மண் நிறமாய்த்தான் ஆசிரியருக்கு தோன்றுகிறது.
இனி, இந்த புதினத்தில் நான் முயங்கிய சில இலக்கிய வரிகள்.

"ஊரில் பலபேரிடம் நெருப்பு மூட்டும் வளர்ப்பு அஞ்சலை என்ற பெண் பாத்திரத்தின் வர்ணிப்பு''

"ஆடுமாடு மேய்க்கிறதுங்க ஆவாரந்தழையை ஒடிச்சு
போட்டு தெளிஞ்ச தண்ணீயை குடிக்கும்''

"அரிசி கடன் கொடுத்தாலும் கொடுப்பா, ஆம்பிடையானை
கடன் கொடுப்பாங்களா''

மாவட்ட கண்காணிப்பாளர், குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட
ஆறுமுக நாட்டாரைப் பற்றி, நினைக்கிற பொழுதில்:

"இவன் குற்றம் செய்திருக்க முடியாது. நாம் சட்டத்தின் கண்கள் கொண்டுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. நியாயத்தின் பக்கம் நிற்க முடியாமல் செய்துவிடுகிறது.''

சட்டத்தின் கண்களும் நியாயத்தில் கண்களும் வெவ்வேறானதா என்ற நிரந்தரக் கேள்வி அப்போதும் இப்போதும் இருப்பதை மேலேகண்ட வரிகளில், வாசகர்களை உணர வைக்கிறார்.

"மரங்களை கைகழுவி காணாமல் போகும் சருகுகள்''

"அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் சுமந்தாகணும்
இது நாட்டான்நீதி, விதுரநீதி அது தான். சூத்திர நீதி''

"அதிகாரத்துக்கு கட்டுப்படுறவன், எதிர்த்து நிக்காதவன்
எல்லோரும் திருடன்தான்''

"அவன் நினைவு வரும் போதெல்லாம், ஊவாமுள்ளாய்
நெருடச் செய்கிறது.''

"போதையில் தான் சாதிவந்து முன்னிற்கும்
அப்புறம் அடிதடியிலே வந்து நிக்கும்.''

"அய்யனார் கோயில் முன் வைத்திருந்த
மண்குதிரைகள் திடுமென உயிர்பெற்று
தங்களை குறிவைத்து ஓடிவரும் காட்சியும்,
இவர்களை குளம்படியில் கூழாக்கி
விரையும் காட்சியும் நிழலாடின''

"ஓடையவன் பார்க்காத வாழை
ஒரு முழம் கட்டைம்பாங்களே''

"தவறிப்போன ஆடு மாதிரி கத்தற சத்தம்''

"பொழைக்க வழியில் லேன்னா, எல்லா வழியும்
நல்ல வழிதான். தப்பு, சரிங்கிறதெல்லாம்
வயிறு நெறைஞ்சவனுக்குத் தான் நமக்கில்லே''

"கல்லாந்தரிசிலே ஒழைச்சு ஓடாத் தேயுறாங்க
மண் வயித்துக்கு வஞ்சனை தான் செய்யுது.''

"என் ஏட்டை எமன் பார்க்கமறந்துட்டானே''

"பேச்சின் தர்க்கம் பல்வேறு புதிர்களுக்குள்
நெட்டித்தள்ளியது. பாசிகுளம் வழியாக
வெள்ளாற்றில் இறங்கும்போது, வழிதவறிவிடும்.
வெள்ளநீர் அரித்து அரித்து, செம்மண்கரைந்து
பலகால்களாக பிரிந்து இறங்கினால் சுற்றிச்சுற்றிச்செல்ல
இறங்கியவழியும் வெளியேறும் வழியும் மறந்துவிடும்.''

"நாளை என்பது யமன் கணக்கு''
"நகமும் சதையும் போல இருந்தாங்க
நகமே சதையை பதம்பார்த்துன்னா,
சதையழுகினா நகத்துக்கும் கேடு''

"கீரியும் பெருச்சாளியும் வளையிலிருந்து
புறப்படும் நேரம்.''

"மணலை கயிறா எப்படி திரிக்க முடியும்?
வாய்க்காலிலே கெடக்குதில்லே நீர்முதுள்ளிச்செடி.
அதோட வெதைகளை மணலோடு சேர்த்து
தண்ணீர் ஊத்தி பக்குவமா பெசைஞ்சா
மணல் நாம, விரும்புற வடிவத்துக்கு வருது''.

கொள்ளிடம் பெரிய ஆறு. ஒவ்வொரு நதிக்கும்
"பின்னால் உள்ள சங்கீதமும் பயங்கரமும் இதற்குமுண்டு
யாருக்கும் அடங்காத கிடாரி போல ஓடிக்கொண்டிருக்கும்.''

"காலம் வாழ்க்கையை வைத்து சதுரங்கம் ஆடுகிறது.''

"எடக்கன் புள்ள பெத்தவளுக்கு தலைச்சன்
புள்ளக்காரி மருத்துவம் சொல்ற மாதிரி யிருக்குதா?''

"இதுசரி இது தப்புங்கிறதெல்லாம் இன்னொரு
கால மாற்றத்திலே அர்த்தமில்லாம போயிடுது.''

"நம்ம அப்பன், பாட்டன், பூட்டன் எல்லாரையும்
மறந்துட்டோம். வம்சக்கொடியை மூணு
தலைமுறைக்கு மேல நம்மால சொல்லமுடியலே
வேர் இத்துப்போன கொடி மரத்திலே படர்ந்திருந்தாலும்
காஞ்ச சருகாத்தான் உதிரும்.''

"உலகம் உயிர்த்தத்துவத்தின் அழகிய உலைக்களம்.
இவை யொன்றை யொன்று இரையாக்கியே வளரவும் வாழவும் செய்யும்.''

"காரிருளில் நிர்வாணமாய் பறந்த பறவையின் கால்தடத்தை
காற்றில் தேடினாலா கிடைக்கும்?''

"நதியின் போக்கில் ஏதுமறியாது உருண்டோடி
மழுங்கிக்கரையும், கூழாங்கல் என நிசப்தமாய்
கரையும் காலம்''

"ஏகலைவன் மண்பொம்மையிடம் தானே கற்றான்?
மண்ணுக்குள் புதைந்தபோன ஏதோ ஒரு
மண்பொம்மையின் நிழல் தானோ நாம்''

இந்த புதினம் உரைநடையில் ஒரு காவியம். இதன் காவிய அழகையெல்லாம், இவ்வளவு குறைவான வார்த்தைகளில் விவரிக்க இயலாது. பாரதம் வருகிறது. கண்ணகி கதைக்கு புதிய அர்த்தம் தோண்டி எடுக்கப்படுகிறது. பாஞ்சாலியின் சீற்றமும், கனலும் அனலாய் தெறித்து, மிக நீண்ட உவமைகளாகிறது. துர்ச்சொப்பன விவரிப்பு, பக்கம் பக்கமாய், நாகமாய், வளைந்து நெளிந்து சீறுகிறது. கும்மிருட்டில் அம்மணம் மறைவதும் புதினக்கவிதையாகிறது.

ஆறுமுக நாட்டாரின் வாழ்வின் அடர்த்திக்குள் நுழைந்து, வாழ்வையும், நம்மையும், இந்த புதினத்தில் தரிசிக்க வைக்கிறார் ஆசிரியர்.

வாழ்வின் யதார்த்திலிருந்து படைப்பின் யதார்த்தத்தை உருவாக்க முனைந்து வெற்றி கண்டிருக்கிறார் தெய்வசிகாமணி.

அவரே என்னுரையில் சொல்லியதைப்போல, ஆறு மாவட்டங்களில் அறுநூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் ஆயிரகணக்கான மனிதர்களின் பேச்சு எழுத்தாக உருவாகி, கானல் காடு என்ற உரைநடை காவியப்புதினமாருக்கிறது.

இந்தக்காவியத்தின் தொண்ணூறு விழுக்காடு பாத்திரங்கள் உண்மையானவை. நாலைந்து பாத்திரங்கள் மாத்திரமே கற்பனையானவை. தமிழ்ப் புதின வரலாற்றில் கானல் காடு ஒரு மைல் கல். புதினத்திற்கான புதிய இலக்கணங்களை படைத்து காவியமாய் உருக்கொண்டிருக்கிறது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஒரு தமிழ்ப்புதினம்.


எஸ்.சுவாமிநாதன்நன்றி : வடக்கு வாசல்