Monday, August 21, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 1

சுதந்திர தினத்தன்று, T நகர் நடேசன் பார்க்கில், முன்னறிவுப்பு ஏதுமில்லாத ஒரு வலைப்பதிவர் சந்திப்பு. அதைத்தொடர்ந்து மகாபலிபுரம் வரை ஒரு சின்ன சுற்றுலா. சிங்.செயகுமார் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்ததால், அவர் பார்க்க விரும்பி சிலரைத் தொடர்புகொள்ள, அது ஒன்பதுபேர்(நான், அருள் குமார், பாலபாரதி, மதுமிதா, சிங். செயகுமார், ப்ரியன், குப்புசாமி செல்லமுத்து, ஜெய்சங்கர் மற்றும் மா. சிவகுமார்) கொண்ட ஒரு சந்திப்பாக நிகழ்ந்தது.

நானும் அருளும் முதலில் பூங்காவிற்கு வந்து சேர்ந்தோம். எங்கு உட்காரலாம் என்று சுற்ருகையில் குப்புசாமியிடமிருந்து அருளுக்கு போன் வந்தது. உள்ளதான் இருக்கோம் வாங்க என்றான். குப்புசாமி வந்ததும் எனக்கு அறிமுகப்படுத்தினான். என்னையும் அவருக்கு...

பிறகு ஜெயகுமாரிடமிருந்து ஒரு போன் வந்தது. மதுமிதா பூங்காவிற்கு வந்துவிட்டார்கள் என்றும், அவங்களே உங்களை கண்டுபிடித்துவிடுவார்கள் என்றும் சொன்னார். எப்படி அவர்களே கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குள்ளே கேட்டபடி, பூங்காவைச் சுற்றிவிட்டு வாசலுக்கு வந்தோம். வாசலிலிருந்தபடி உள்ளேயும் வெளியேயும் பார்வைக்கெட்டியவரை மதுமிதா அவர்களைத் தேடினோம். எங்களை உள்ளே தேடிக்கொண்டிருந்த மதுமிதா கண்களில் பட, அவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தபடி உள்ளே சென்றோம். அவரும் அதே நோக்கத்தோடு எங்களை நோக்கி வர, முகங்களே எங்களை எங்களுக்குள் பேசிக்கொள்ச் செய்தது.

"மதுமிதா நீங்கதானே..." என்று அருள் முடிப்பதற்குள் அவர்கள் ஆமோதிக்க, எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அப்போதே ஜெய்ஷங்கரும் உள்ளே வந்தார். வந்ததும் வராததுமாய், சுதந்திர தின வாழ்த்து சொல்லி, ஆளுக்கொரு தேசியக்கொடியை கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார். "நாம் இந்திய மக்கள்" எழுதுபவராயிற்றே...!

பிறகு நாங்கள் ஐவரும் உட்கார்ந்து பேச இடம் தேடினோம். அவ்வளவு பெரிய பார்க்கில், ஒரு பத்து பேர் உட்கார்ந்து பேச ஒரே இடமாக இல்லாமல் இருக்கிறதே என்ற வருத்தம் எனக்குள். முன்தினம் மழை பெய்திருந்ததால் புல் தரையெங்கும் ஈரமாய் இருந்தது. எனினும் மதுமிதா ஒரு நல்ல இடத்தைச் சொன்னார். ஒரு கூடாரத்தில், சுற்றிலும் அமர்ந்து பேச வசதியாக சிமெண்ட் பெஞ்ச் இருந்தது. நாங்கள் போய் உட்கார்ந்து பேச ஆரம்பித்ததும் ஏற்க்கனவே அங்கு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள்.

மதுமிதா, தான் விரைவில் கொண்டுவரவிருக்கும் "வலை பூங்கா ஓர் அறிமுகம்" நூலைப்பற்றி சொன்னார். பேச ஆரம்பித்ததும் ப்ரியன் வந்தார். பிறகு சிங். ஜெயகுமார் தன் நண்பர் கண்ணனுடன் வந்தார். இதற்குள் அருள் சிவகுமாருக்கு போன் செய்து நாங்கள் நடேசன் பூங்காவைல் கூடியிருக்கிறோம் வாருங்கள் என்று அழைத்துவிட்டு பாலபாரதிக்கு போன் செய்தான். வழக்கம் போல "தோ வந்துட்டேன் தல..." என்று சொல்லியிருக்கலாம் அவர்! அருள் எனக்கு மட்டும் கேட்கும்படி இப்போதான் வீட்டை விட்டு கிளம்பறாரு என்றான். பின் குப்புசாமி பக்கம் சென்றது பேச்சு. குப்புசாமியை யாருக்கு அறிமுகப்படுத்த்னினாலும் "ஓ.. நீங்கதானா அது..." என்று அவரின் புகழ்பெற்ற கதையொன்றை நினைவுகூர்ந்தார்கள்!

மதுமிதா தன் முந்தைய நூல்களை ஜெயகுமாருக்கு அன்பளிப்பாக தருவதற்காக எடுத்து வந்திருந்தார். அதை வாங்கி நாங்கள் அனைவரும் ஒரு புரட்டு புரட்டினோம். தன் புத்தகங்கள் பற்றியும், பதிப்பங்களுடனான தன் பனுபவங்களையும் மதுமிதா பகிர்ந்துகொண்டார். மதுமிதாவிடமிருந்து புத்தங்களை அன்பளிப்பாக ஜெஉஅகுமார் பெற்றுக்கொள்ள, பல பெண் கவிஞர்கள் பற்றி மதுமிதாவிடம் நாங்கள் பேசினோம். மாலதி மைத்ரி, லீனா மணிமேகலை, இளம்பிறை... இவர்கள் பற்றியெல்லாம் பேச்சு நீண்டது.

ப்ரியன், கவிதைகள் மீதான தன் ஈடுபாட்டைச் சொல்லிக்கொண்டிருந்தபோது மா. சிவகுமார் வந்தார். அருள் அவரை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தான்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை சுவாரஸ்யமாக கவனித்த, வாக்கிங் வந்த ஒரு ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர், எங்களோடு உரையாட ஆரம்பித்த அனுபவத்தை சிவகுமாருக்கு விளக்கிய மதுமிதா, அவருக்கும் ஒரி வலைப்பூ ஆரம்பித்துவைக்க உதவும்படி சொன்னார்.

சரியாக அந்த நேரத்தில் பால பாரதி வந்து சேர்ந்தார். கையில் ஒரு கருப்புக் குடை. கையெடுத்து அரசியல் வாதி போல் கும்பிட்டபடி, "தாமதத்துக்கு எல்லோரும் என்ன மன்னிக்கணும்..." என்று ஆரம்பித்து, தனது கருத்துக்களை பிய்த்து உதரினார். அதற்குப்பின் பெரும்பாலும் அவர்தான் பேசிக்கொண்டேயிருந்தார்!

குப்புசாமியின் கதை பற்றித்துவங்கி, பாலகுமாரன், சுஜாதா, குங்குமத்தில் வலைப்பதிவாளர்களை எழுதவைப்பது என்று தனது கருத்துக்களை அவருக்கே உரித்தான பாணியில் சொல்ல, கூட்டம் கலை கட்டியது. அனைவரும் பேசி முடித்த தருவாயில், ஒரு சின்ன ப்ளாஸ்டிக் டப்பாவில் மதுமிதா கொண்டுவந்திருந்த வேர் கடலைகளையும், சப்போட்டா பழங்களையும் பகிர்ந்து சாப்பிட்டு முடிக்க, மதுமிதா கிளம்பினார். விடுமுறைதானே என்று நாங்கள் அனைவரும் மகாபலிபுரம் போகலாம் என முடிவெடுக்க, ப்ரியன் மட்டும் வரமுடியாது என்று சொல்லிவிட்டார். தன் காதல் கவிதைகளுக்கான அனுபவங்களைச் சேகரிக்கும் பணி இன்று தனக்கு இருப்பதாய் சொன்னதால் நாங்களும் அவரை வர்புறுத்தவில்லை :)

மகாபலிபுரம் செல்ல இன்னொரு வாகனம் தேவைப்பட நானும் அருளும் எடுத்துவர சென்றுவிட்டோம். நாங்கள் வரும்வரை நண்பர்கள் திருப்பதி தேவஸ்தானம் கோயில் அருகே பேசிக்கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.

அங்கு அவரகள் என்ன பேசினார்கள் என்று இனி ப்ரியன் சொல்வார்...

10 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.

புகைப்படங்களில் நம்ம ஊரைக் காட்டியதற்குப் பிரத்தியேக நன்றிகள்.

சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? என்ன சொல்றீங்க? நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம். ;)

புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.

சுவாரசியமான அனுபவம் - எங்களுக்கும்.

அருண்மொழி said...

தொடர் பதிவுகள் பிரமாதம் ( Idea யாருடையது?). அப்படியே படங்களில் இருப்பவர் பெயரை வரிசையாக போடலாமே

நாகை சிவா said...

நன்றாக உள்ளது.
தொடர்ந்து படித்து விட்டு வரேன்

- யெஸ்.பாலபாரதி said...

// அதற்குப்பின் பெரும்பாலும் அவர்தான் பேசிக்கொண்டேயிருந்தார்!
//
மாப்ளே... கவுத்தீட்டியேயா...

We The People said...

//சரியாக அந்த நேரத்தில் பால பாரதி வந்து சேர்ந்தார். கையில் ஒரு கருப்புக் குடை. கையெடுத்து அரசியல் வாதி போல் கும்பிட்டபடி// சூப்பரப்பூ!!! பாலபாரதியும் கருப்புகுடையும் என்று புது பதிவு போடுங்கப்பு...

//தன் காதல் கவிதைகளுக்கான அனுபவங்களைச் சேகரிக்கும் பணி இன்று தனக்கு இருப்பதாய் சொன்னதால் நாங்களும் அவரை வர்புறுத்தவில்லை :)// எப்படிங்க இப்படி சூப்பரா மேட்டரை வேற டைப்புல சொல்ல முடியுது... எல்லாம் திரை இயக்குனர்களுக்கு தானா வருமோ??

மதுமிதா said...

'கண்ணாடியும் கறுப்புக்குடையும்'னு
தலைக்குத் தலைப்பு குடுக்கணும்னு சொன்னது மறந்தாச்சா.

அது சரி பாலபாரதியை அடுத்த வருடம் தேசமெல்லாம் தேடுங்கறதைப்பத்தி சொல்லலியே???
ரகசியமா எழுத வேணாம்னு சொன்னாரா?


அப்ப அடுத்த பயணத்தை மிஸ் செய்தது ப்ரியனும் தானா

மதுமிதா said...

வீரமணி
திரை இயக்குநரா ஜொலிக்கப்போறீங்க.
வாழ்த்து சொல்ல வருவோம்.
அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் செய்து பார்க்க வரணும்.பிஸின்னு சொல்லிட மாட்டீங்களே

வீரமணி said...

நன்றி அருண்மொழி.

படங்களில் இருப்பவர்கள் பேரை போட்டுடலாம்.

நன்றி மதி.

நன்றி சிவா.

நன்றி மதுமிதா மேடம்.

//அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் செய்து பார்க்க வரணும்.பிஸின்னு சொல்லிட மாட்டீங்களே // உங்க கிட்ட எல்லாம் கதை பற்றி கலந்துரையாடிதான் படமே எடுப்போம். உங்கள சந்திக்காம இருக்கமுடியுமா?!

சிறில் அலெக்ஸ் said...

ம்ம்ம்... அருமையான சந்திப்பு உட்லாண்ட்ஸ் சந்திப்புக்கு போட்டியா?

:)

ரிலே தொடரா? ம்ம் கலக்குறீங்க. எப்படா சென்னை போயி இந்த சந்திப்பு ஜோதியில ஐக்கியமாவொம்னு கனவு காண வச்சுட்டீங்க.

Anonymous said...

அருமையான சந்திப்பு..பொறாமையாக உள்ளது...