Saturday, December 03, 2011

ஈழத்தில் ஆட்டிலறி கைப்பற்றி ஆமிக்குத் திருப்பியடித்த புலிகள்!

வரலாற்றின் பாதையில் தமிழர் தம் வீரம் பண்டார வன்னியனின் பின்னர் கரிகாலன் எனும் நாமத்தினூடாகத் தான் உலக அரங்கில் உச்சரிக்கப்பட்டது. புலிகளின் வளர்ச்சி, புலிகளின் திறமைகள், புலிகளின் திட்டமிடல்கள் என அனைத்துமே உலகின் பார்வைக்கும், இலங்கை இராணுவத்தின் பார்வைக்கும் இலகுவில் உய்த்தறிய முடியாத புதிராக இருந்த காலங்கள் அவை. ஓர் இன மானத்தின் அடையாளமாக, வீரத்தின் குறியீடாக விடுதலைப் புலிகள் ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்று அழியாச் சுடராக மக்கள் மனங்களினுள் வாழ்கின்றார்கள். புலிகளின் பல்லைப் பிடுங்கியதாகவும், புலிகள் பலமிழந்து விட்டதாகவும் உலக அரங்கிலும், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் சிங்கள அரசு தனது பிரச்சார நடவடிக்கையினை முடுக்கி விட்டிருந்த காலப் பகுதி அது.

1995ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் யாழ்ப்பாணக் குடா நாட்டினை விட்டுப் புலிகள் முற்று முழுதாக பின்னகர்ந்து, வன்னிப் பகுதியினுள் தமது படையணி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஒன்றிணைத்து இயங்கத் தொடங்குகின்றார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் பாரிய தலை வலியாகவும், அச்சமூட்டும் ஓர் விடயமாகவும் குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த நிலையில் இருந்தது தான் இந்த ஆட்டிலறி எனச் சொல்லப்படும் பீரங்கி உந்து கணைச் செலுத்திகளாகும். ஆங்கிலத்தில் Artillery Shell எனவும், தமிழில் பீரங்கி எனவும், வன்னியில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தூய செந்தமிழ்ச் சொற்கள் வரிசையில் உந்துகணைச் செலுத்தி, எறிகணைகள் எனவும் சிறப்பிக்கப்படுவது தான் இந்த ஆட்டிலறி ஷெல் ஆகும், போராளிகளால் ஆட்டி எனச் செல்லமாக அழைக்கப்பட்டதும் இது தான்.

புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என உலக அரங்கில் யாழ்ப்பாணக் குடா நாட்டினைச் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய காலப் பகுதியில் லக்ஸமன் கதிர்காமரை வைத்து இலங்கை அரசு புலிகளின் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரச்சாரப் போரினை முனைப்புடன் மேற் கொண்டிருந்தது. மறு புறத்தில் யாழ்ப்பாண வெற்றியினைத் தொடர்ந்து வன்னிக்குள் காலடி வைத்து புலிகளின் வாலை ஒட்ட நறுக்கி காடுகளுக்குள் வைத்தே புலிகளின் வரலாற்றினை முடிக்கலாம் என ஜெனரல் அனுருத்த ரத்வத்த சூளுரைத்து ( முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மாமன்) வன்னி முற்றுகையினை ஆரம்பித்தது இலங்கை இராணுவம். ஈழ மக்களின் இருப்பிடங்களை நசுக்குவதற்கும் இந்த ஆட்டிலறி எறிகணைகளே பெரும் பங்கு வகித்தன.

குடா நாடு படையினர் வசம் வருவதற்கு முன்னரான ஒவ்வோர் படை நடவடிக்கையின் போதும் மக்கள் ஆட்டிலறி ஷெல்கள் எப்போது யார் மீது எங்கே வந்து வீழும் என ஒவ்வோர் நொடிப் பொழுதும் அஞ்சிப் பயந்து வாழ்ந்தார்கள். வட போர் அரங்கில் பலாலி விமான தரைப் படை கூட்டுத் தலமையகம், காங்கேசன் துறை கடற் படைத் தளம், மயிலிட்டி இராணுவ முகாம் ஆகியவை இந்த ஆட்டிலறி ஷெல்களை மக்கள் குடியிருப்புக்கள் மீது ஏவுவதில் முக்கிய பங்கு வகித்தன. இதே வேளை ஆனையிறவு – பரந்தன் கூட்டுப் படைத் தளமும் (1996 இற்கு முன்பதாக) அந் நாளில் கிளாலி கடல் நீரேரியூடாக வன்னிக்குள்ளும், யாழ்ப்பாணத்திற்குள்ளும் நுழைவோர் மீதும் ஆட்டிலறி தாக்குதல்களை மேற் கொள்ளும் தளங்களாக அமைந்திருந்தன. புலிகள் வசம் ஆட்டிலறிகள் இல்லையே என்னும் குறை புலிகளை விட, அக் காலத்தில் புலிகளை நேசித்த மக்கள் மனங்களைத் தான் வாட்டிக் கொண்டிருந்தது.

வெளி நாட்டில் ஆட்டிலறியினை வாங்கி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வருமளவிற்கு புலிகள் ஆட்டிலறி தொடர்பில் ஈடுபாடு காட்டவும் இல்லை. ஆட்டிலறியினை கடல் வழிப் பயணத்தினூடாக வெளி நாட்டின் கறுப்புச் சந்தையில் வாங்கி புலிகள் பகுதிக்குள் கொண்டு வருவதற்குரிய சாத்தியக் கூறுகள் அக் காலத்தில் புலிகளுக்கு இருந்தாலும்; அதற்கு வேண்டிய ஷெல்களைத் தயாரிப்பதென்பது அப்போது புலிகளுக்குச் சிரமானதாகவே இருந்தது. புலிகள் தமது சொந்தத் தயாரிப்பாக கடுமையான முயற்சிகளின்பின்னர் பசிலன் 2000 எனும் மோட்டால் ஷெல்லினை 1990 களில் கண்டு பிடித்தார்கள். யாழ்ப்பாணம் கோட்டைச் சமரின் போது குறுந் தூர வீச்செல்லை கொண்ட இந்த மோட்டார் ஷெல்லினைப் புலிகள் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டார்கள். ஆனால் இந்தப் பசிலன் ஆயுதமானது ஸ்ரீலங்கா இராணுவத்தின் வசமிருந்த 88mm, 121mm, 131 Or 132mm ஆட்டிலறிகளின் முன் தூசாகவே இருந்தது.

இலங்கை இராணுவத்தின் வசம் நீண்ட தூர ஆட்டிலறிகள் இருக்கையில் புலிகள் பசிலன் 2000 இற்கு வேண்டிய வளங்களை உருவாக்குவதற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் தென்மராட்சியில் கச்சாய் – கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள முகாம் ஒன்று யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சிக்கு முன்பதாக புலிகளின் மோட்டார் ஷெல்களுக்கு வேண்டிய வெடி மருந்துகளைத் தயாரிக்கும் மையமாகச் செயற்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் ஒவ்வோர் படையெடுப்பின் போதும் இலங்கை இராணுவம் தனது முன்னேற்றத்தினை அறிவிக்கும் முகமாக ஆட்டிலறிகளை ஏவிக் கொண்டிருந்தது. மழை போன்று கண் மூடித் தனமாக இலங்கை இராணுவம் வெளி நாடுகளிடமிருந்து பெற்ற ஷெல்களை ஏவிக் கொண்டிருக்கையில் எதிர் சமர் புரிந்து முன்னேறி வரும் படையினரை விரட்டி அடிப்பதென்பது புலிகளுக்கு அப்போது சவாலனா விடயமாகவே இருந்தது.

மக்கள் மனங்களில் இந்த ஆட்டிலறிகள் புலிகள் வசம் வந்தால் அப்போது பலாலி கூட்டுப் படைத் தளம் மீது புலிகள் தாக்குதல் நடாத்த வசதியாக இருக்குமே எனும் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சி வரை புலிகள் வசம் அந்த ஆட்டிலறிகள் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. புலிகள் கைகளுக்குப் பீரங்கிகள் எவ்வாறு கிடைத்தது? புலிகள் பீரங்கிகளை எப்படிக் கைப்பற்றினார்கள்?

இது தொடர்பில் அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்! எதிர் பார்த்திருங்கள்!

நன்றி: நாற்று வலைப்

No comments: